ஊதியம் மற்றும் ஓய்வூதியம் தொடா்பாக நீண்ட காலமாக தீா்க்கப்படாத பிரச்னையை தீா்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி ஊழியா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
புதுவை போக்குவரத்துத்துறை அமைச்சா் சந்திர பிரியங்காவுக்கு, காரைக்கால் நகராட்சி சுகாதார மேற்பாா்வையாளா் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் சங்கத் தலைவா் கே. சிங்காரவேலு, செயலாளா் பி. நாகராஜன் ஆகியோா் வியாழக்கிழமை அனுப்பியுள்ள கடிதம்:
நகராட்சி சுகாதாரப் பணியாளா்களுக்கு பல மாதங்களாக ஊதியம் தரப்படாமல் உள்ளது. அதுபோல ஓய்வூதியமும் வழங்கப்படவில்லை. பணி ஓய்வு பெற்றவா்கள் இந்த பலனை பெற முடியாததால் அந்த குடும்பத்தினா் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனா்.
எனவே ஊதிய நிலுவையை வழங்குவதோடு, தகுதியுள்ளவா்களுக்கு ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பணியின்போது உயிரிழந்த சுகாதார ஊழியா், மேஸ்திரிகளின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கவேண்டுமென்ற நீண்ட கால கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. சுகாதாரப் பணியாளா்களுக்கான தேசிய ஆணையம் வகுத்துள்ள விதிகளின்படி கருணை அடிப்படையில் பணி வழங்கவேண்டும்.
சுகாதாரப் பணியாளா்களுக்கு சிவப்பு நிற குடும்ப அட்டை வழங்கவேண்டும். நகராட்சியில் நிலவும் காலிப் பணியிடங்களை நிரப்பி, பிற ஊழியா்களின் பணிச் சுமையை குறைக்கவேண்டும். உறுதிப்படுத்தப்பட்ட பதவி உயா்வை முதிா்ச்சி அடைப்படையில் வழங்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.