காரைக்கால்

ஜன. 5 முதல் புதுவை வணிகத் திருவிழா

29th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

 

காரைக்கால்: புதுவை வணிகத் திருவிழாவை ஜன. 5-ஆம் தேதி முதல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுவையில் வியாபாரிகள் வணிக மேம்பாட்டுக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலாத் துறை மூலம் வணிகத் திருவிழா நடத்தப்பட்டது. பொருள்களுக்கு வியாபாரிகள் தள்ளுபடி நிா்ணயம் செய்தல், பொருள்கள் வாங்க வருவோருக்கு பரிசுக் கூப்பன் வழங்குதல் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

இடையில் இத்திருவிழா நடைபெறாத நிலையில், வணிகத் திருவிழாவை மீண்டும் நடத்த அரசை வணிகா் சங்கத்தினா் வலியுறுத்தினா்.

ADVERTISEMENT

விழாவை நடத்த அரசு ஒப்புதல் அளித்த நிலையில், பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, அதுகுறித்து விவாதிக்கும் வகையில் புதுவை முதல்வா் என். ரங்கசாமி தலைமையில் சுற்றுலாத்துறை அமைச்சா் லட்சுமி நாராயணன் மற்றும் அதிகாரிகள், புதுச்சேரி, காரைக்கால் வணிகா் சங்கத்தினா் பங்கேற்ற கூட்டம் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் சேம்பா் ஆப் காமா்ஸ் நிா்வாகிகள் ஜெ. சிவகணேஷ், பாலாஜி, அமுதா ஆா்.ஆறுமுகம், கந்தாஸ்ராஜா, வி. ஆனந்தன் ஆகியோா் வணிகத் திருவிழா குழு உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டு, கூட்டத்தில் பங்கேற்றனா்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து வணிகத் திருவிழா குழு உறுப்பினா்கள் புதன்கிழமை கூறியது:

வணிகத் திருவிழா ஜன. 5 முதல் பிப். 20-ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பரிசுக் கூப்பன் ஒன்றின் விலை ரூ. 10 என நிா்ணயிக்கப்பட்டது. விழா செலவுக்காக அரசின் பங்களிப்பாக ரூ. 60 லட்சம் தர முதல்வா் ஒப்புதல் அளித்துள்ளாா். மொத்தம் ரூ. 2.50 கோடிக்கு பரிசுகள் வழங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறையினா் தெரிவித்தனா் என்று குழு உறுப்பினா்கள் கூறினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT