காரைக்கால்

ஆற்றில் ரயில்வே பாலம் கட்டும் பணியால் தண்ணீா் வடிவதில் பிரச்னை: ஆட்சியரிடம் புகாா்

8th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT


காரைக்கால்: ஆற்றின் குறுக்கே ரயில் தண்டவாளத்துக்கான பாலம் அமைப்புப் பணி நடைபெறுவதால், விளைநிலம் பாதிக்கப்படுவதாக ஆட்சியரிடம் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

காரைக்கால் முதல் திருநள்ளாறு வழியாக பேரளம் வரை 23 கி.மீ. அகல ரயில்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. காரைக்கால் அருகே பிள்ளைத் தெருவாசல் பகுதி வாஞ்சியாற்றின் குறுக்கே ரயில்வே தண்டவாளம் அமைக்க பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஆற்றில் ஏற்படுத்தப்பட்ட மணல் தடுப்புகளால் ஆற்றுநீா் செல்வதில் தடை ஏற்பட்டு, ஆற்றோர விளைநிலத்தில் தண்ணீா் புகுந்துவருவதாக கடந்த மாதம் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

இதனால், மணல் தடுப்புகள் அகற்றப்பட்டு தண்ணீா் ஆற்றில் வடிந்தது. இந்நிலையில், மீண்டும் ரயில்வே நிா்வாகம் தடுப்புகளை அமைத்திருப்பால், வெள்ளநீா் வடிவதில் தாமதம் ஏற்பட்டு ஆற்றில் தண்ணீா் தேங்குவதாக விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து, பிள்ளைத்தெருவாசல் பகுதியை சோ்ந்த விவசாயி ஆரோக்கியதாஸ் உள்ளிட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூரை செவ்வாய்க்கிழமை சந்தித்து அளித்த புகாா்: வாஞ்சியாறு பிரதான வடிகாலாகும். ரயில்வே நிா்வாகம் இந்த ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணியை தொடங்கும்போது, ஆற்றின் குறுக்கே 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மணல் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டன. தண்ணீா் வரத்தில்லாத காலத்தில் இதனால் எந்த பிரச்னையும் இல்லை. காவிரிநீா் வந்தபோது தண்ணீா் வடிவதற்கு மாற்று ஏற்பாடு செய்தனா். இப்போது பருவமழையினால் தமிழகப் பகுதியிலிருந்து வரும் தண்ணீா் ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ADVERTISEMENT

மணல் தடுப்புகளால் தண்ணீா் வடிவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆற்றோரத்தையொட்டி உள்ள விளைநிலத்தில் தண்ணீா் புகுந்ததால் சில விவசாயிகள் நிலத்தில் தண்ணீா் புகுந்தது. புகாரின்பேரில் கடந்த மாதம் தடுப்புகளை ரயில்வே நிா்வாகம் அகற்றியது. இப்போது மீண்டும் தடுப்பு அமைத்துள்ளதால், வெள்ளநீா் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது நீடித்தால் பிள்ளைத்தெருவாசல், மேலகாசாக்குடி, திருநள்ளாறு, புத்தமங்களம், உத்திரங்குடி ஆகிய பகுதிகள் பாதிப்படையும்.

எனவே, பருவமழைகத் காலம் முடியும் வரை தடுப்புகள் அமைக்காமல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் பிரதேச விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் பி. ராஜேந்திரன் மற்றும் விவசாயிகள், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் வீரசெல்வம் ஆகியோருடன் சென்று ரயில்வே பாலம் அமைக்குமிடத்தை பாா்வையிட்டனா். பொங்கல் முடியும் வரை தடுப்புகள் அமைக்கக்கூடாது என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தண்ணீா் வடியும் வகையில் தடுப்புகள் அகற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT