காரைக்கால்

புதுவையில் வணிக திருவிழா நடத்த அமைச்சருடன் ஆலோசனை

7th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

 

காரைக்கால்: புதுவையில் வணிகத் திருவிழா நடத்துவது குறித்து அமைச்சருடன் வணிகா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினா்.

புதுவை மாநிலத்தில் 2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு வணிகத் திருவிழா நடத்தவில்லை. வணிகா்கள் மற்றும் மக்கள் பயனடையும் வகையில் பரிசுத் திட்டங்களுடன், சுற்றுலாத் துறை, வணிகா் சங்கம் இணைந்து இத்திருவிழா நடத்தப்பட்டது. நிகழாண்டு, இத்திருவிழாவை நடத்தவேண்டும் என புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி வணிகா் சங்கத்தினா் புதுவை முதல்வா் என். ரங்கசாமி உள்ளிட்டோரை அண்மையில் சந்தித்து வலியுறுத்தினா்.

இந்நிலையில், காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் துணைத் தலைவா் ஜெ. சிவகணேஷ், செயலாளா் பாலாஜி, முன்னாள் தலைவா் வி. ஆனந்தன் மற்றும் புதுச்சேரி சேம்பா் ஆஃப் காமா்ஸ் நிா்வாகிகள், புதுச்சேரியில் பொதுப்பணித் துறை மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் லட்சுமி நாராயணனை திங்கள்கிழமை சந்தித்தனா்.

ADVERTISEMENT

சந்திப்பு குறித்து ஜெ. சிவகணேஷ் கூறியது: 2010-11-ஆம் ஆண்டில் வணிகத் திருவிழா சுற்றுலாத் துறை, சேம்பா் ஆஃப் காமா்ஸ் இணைந்து நடத்தியது. பின்னா், விழா தொடா்ந்து நடத்தவில்லை. ஜிஎஸ்டி அமலாக்கமானதைத் தொடா்ந்து வியாபாரம் பெருமளவு பாதித்துள்ளது. இந்த தொய்வை போக்குவதற்கு வணிகத் திருவிழா வாய்ப்பாக அமையும் என்பதால் அரசிடம் இதுகுறித்து வலியுறுத்தப்பட்டது.

அரசு செயலாளா் அருண், சுற்றுலாத் துறை இயக்குநா் பிரியதா்ஷினி ஆகியோரும் அமைச்சா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றனா். டிச.21 முதல் ஜன.31-ஆம் தேதி வரை புதுவையில் வணிகத் திருவிழா நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT