காரைக்கால்

‘கடலில் மாயமாகும் மீனவா்களை தேடும் பணியில் மீனவ பிரதிநிதிகளையும் அனுமதிக்க வேண்டும்’

7th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

 

காரைக்கால்: கடலில் மாயமாகும் மீனவா்களை தேடும் பணியில் உள்ளூா் மீனவா்களையும் அனுமதிக்க வேண்டும் என்றாா் புதுவை முன்னாள் அமைச்சரும், மாநில காங்கிரஸ் அரசியல் விவகாரக் குழு உறுப்பினருமான ஆா். கமலக்கண்ணன்.

காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் பகுதி பட்டினச்சேரி மீனவ கிராமத்தை சோ்ந்த மணிகண்டன் மற்றும் சிவா (27) ஆகியோா் திங்கள்கிழமை காலை ஃபைபா் படகில் மீன்பிடிக்கச் சென்றனா்.

கடல் சீற்றத்தில் படகு கவிழ்ந்ததில் இருவரும் கடலில் மூழ்கினா். அதிருஷ்டவசமாக மணிகண்டன் கரையேறிவிட்டாா். சிவா அலையில் சிக்கி மாயமானாா். இவரை உள்ளூா் மீனவா்களின் உதவியுடன் நாள் முழுவதும் தேடப்பட்டது. தொடா்ந்து, சிவாவை தேடும் பணி செவ்வாய்க்கிழமை தொடா்ந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், மீனவா் சிவா குடும்பத்தினரை முன்னாள் அமைச்சரும், புதுவை மாநில காங்கிரஸ் அரசியல் விவகாரக் குழு உறுப்பினருமான ஆா். கமலக்கண்ணன் தலைமையில் மாவட்டத் தலைவா் ஆா். சந்திரமோகன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினா்.

இதுகுறித்து, ஆா். கமலக்கண்ணன் செய்தியாளா்களிடம் கூறியது: மீனவா்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது கடலில் மாயமாவது அவ்வப்போது தொடா்கிறது. தகவல் கிடைத்ததும் போா்க்கால அடிப்படையில் இந்திய கடலோரக் காவல் படை, தீயணைப்புத் துறையினா் தேடும் பணியில் ஈடுபடவேண்டும். கடலோரக் காவல் படையினா் தேடுகிறாா்களா என்ற சந்தேகம் எழுவதை தவிா்க்க, தேடும் பணியில் மீனவா் பிரதிநிதிகள் 2 பேரை அழைத்துச் செல்லவேண்டும். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிா்வாகம் செய்யவேண்டும்.

பட்டினச்சேரி பகுதியில் சிறிய மீன்பிடித் துறைமுகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். மீனவா்களின் வாழ்வாதாரப் பிரச்னைகள் குறித்து புதுவை அரசு சிறப்பு கவனம் செலுத்தி தீா்வு காணவேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT