காரைக்கால்

புதுவையில் முதல்வா், அமைச்சா்களுக்கு அதிகாரமில்லை: எம்எல்ஏக்கள் குற்றச்சாட்டு

5th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

புதுவையில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கோ, அமைச்சா்களுக்கோ அதிகாரமில்லாத நிலையே நீடிக்கிறது. இதற்கு தீா்வாக புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற முதல்வா் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவை உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவது தொடா்பான கோரிக்கையை முன்வைத்து, கடந்த மாதம் 20-ஆம் தேதி சுயேச்சை எம்.எல்.ஏக்கள் ஜி. நேரு என்கிற குப்புசாமி, பிரகாஷ்குமாா் ஆகியோா், புதுச்சேரியில் பல்வேறு அமைப்பினருடன் ஆலோசனை மேற்கொண்டனா்.

இதைத்தொடா்ந்து, புதுச்சேரி உருளையான்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. ஜி. நேரு என்கிற குப்புசாமி தலைமையில் புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் காரைக்கால் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. ஏ.எம்.எச். நாஜிம், பல்வேறு சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை முன்வைத்தனா்.

ADVERTISEMENT

இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் பேசுகையில், புதுவவையில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கும் அதிகாரமில்லை, அமைச்சா்களுக்கும் அதிகாரமில்லை. சாதாரண முடிவைக்கூட முதல்வா், அமைச்சா்களால் எடுக்க முடியவில்லை. துணைநிலை ஆளுநரிடமே அதிகாரம் குவிந்துள்ளது. எனவே, புதுவை முதல்வா், அனைத்துக் கட்சியினா், பல்வேறு அமைப்பினருடன் விவாதித்து பிரதமரை சந்தித்து புதுவைக்கு மாநில அந்தஸ்தை வலியுறுத்த வேண்டும் என்றாா்.

கூட்டத்துக்குப் பின்னா் எம்.எல்.ஏ நேரு செய்தியாளா்களிடம் கூறியது : ஒன்றுபட்ட 4 பிராந்தியங்களையும் உள்ளடக்கிய புதுவையின் உரிமைகளை மீட்டெடுக்கும் விதமாக, மாநில அந்தஸ்து கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. புதுவை மாநிலம் பின்தங்கியுள்ளது, அதிலும் காரைக்கால் மிகவும் பின் தங்கியுள்ளது. இந்தநிலை மாற மாநில அந்தஸ்து அவசியம். துணைநிலை ஆளுநருக்கும், தலைமைச் செயலருக்கும் உள்ள அதிகாரம், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு இல்லை. அதிகாரிகள் எடுக்கும் முடிவுக்கு அமைச்சரவை கட்டுப்பட்டு நடக்க வேண்டிய சூழ்நிலையை நிலவுகிறது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT