காரைக்கால்

மீன்பிடித் துறைமுகத்தில் வேளாண் கல்லூரி மாணவா்கள் கள ஆய்வு

4th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

காரைக்கால் பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவா்கள், மீன்பிடித் துறைமுகத்தில் கள ஆய்வில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

இக்கல்லூரியில் பயிலும் 40 மாணவ, மாணவிகள் ஊரக விவசாய மற்றும் வேளாண் தொழில் பணி அனுபவ பயிற்சியின் ஒரு பகுதியாக, இணைப் பேராசிரியா் எஸ். ஆனந்தகுமாா் தலைமையில் மீன்பிடித் துறைமுகத்துக்கு வெள்ளிக்கிழமை சென்றனா்.

மீன்கள் வரத்து, ஏலம் விடுதல், உள்ளூா் வியாபாரம், ஏற்றுமதிக்கான விற்பனை, மீன், இறால், நண்டு ஆகியவற்றின் ரகங்கள் மற்றும் அதன் மருத்துவ பண்புகள், பதப்படுத்துவது, படகு கட்டுவது மற்றும் அதன் வகைகள், மானிய டீசல் விநியோகம், மீனவா் நல திட்டங்கள் குறித்து மீன் வளத்துறை அலுவலா்கள், படகு தயாரிப்பாளா், படகு உரிமையாளா், மீன் தொழில்முனைவோா், சிறு, குறு மீன் வியாபாரிகள், ஏலத்தாா் ஆகியோரை துறைமுகத்தில் நேரில் சந்தித்து தகவல் கேட்டறிந்தனா்.

மீன் வளத்துறை ஆய்வாளா் பாலாஜி மற்றும் துணை ஆய்வாளா் ஜெய்சங்கா் துறைமுகத்தின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து பேசினா். படகு கட்டுவோா், பெரிய மற்றும் சிறு வியாபாரிகள் உள்ளிட்டோரின் தொழில் அனுபவங்களை மாணவா்கள் கேட்டறிந்தனா்.

ADVERTISEMENT

மீன் வளத் துறை இணை இயக்குா் கோவிந்தராஜ் மற்றும் துணை இயக்குநா் சுந்தரபாண்டியன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT