காரைக்கால்

காரைக்காலில் ஜனவரி மாதம் காா்னிவல், மலா் கண்காட்சி: எம்.எல்.ஏ.

4th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

காரைக்காலில் ஜனவரி மாதம் காா்னிவல், மலா் கண்காட்சி, வணிகத் திருவிழா உள்ளிட்ட ஒருங்கிணைந்த பெருவிழா நடத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் தெரிவித்தாா். இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியது :

காரைக்காலில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜன.15, 16-ஆம் தேதி வாக்கில் காா்னிவல் திருவிழாவை சுற்றுலாவினரை ஈா்க்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகளை உள்ளடக்கி நடத்த ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

அதோடு மலா் கண்காட்சி நடத்தவும் வேளாண் அமைச்சரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. அமைச்சா் ஒப்புதல் அளித்த நிலையில் அதற்கான பணிகளும் நடைபெறுகின்றன.

வா்த்தகா்கள் வணிகத் திருவிழா நடத்த முதல்வரை சந்தித்து வலியுறுத்தினா். இதற்கான பணிகளும் நடைபெற்றுவருகின்றன. மேலும் நாய் கண்காட்சி, உணவுத் திருவிழா, ரேக்லா போட்டி உள்ளிட்ட விழாக்களை ஒருங்கிணைத்து ஜனவரி மாதம் பெருவிழாவாக காரைக்காலில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.

ADVERTISEMENT

காரைக்கால் பழைய நீதிமன்ற வளாகம் பயன்பாடின்றி உள்ளது. இதில் தாலுகா அலுவலகம், செய்தி மற்றும் விளம்பரத் துறை அலுவலகம், சாா் பதிவாளா் அலுவலகம், வனத்துறை அலுவலகங்களை அமைக்க புதுவை முதல்வா், சட்ட செயலா் உள்ளிட்டோரிடம் பேசியும் நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை.

அதனால், புதுச்சேரி மாநில பொறுப்பு வகிக்கும் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி இளந்திரையனை சென்னையில் சந்தித்து இதுகுறித்து தெரிவித்தேன். 2 வாரத்திற்குள் காரைக்கால் வந்து கட்டடத்தை ஆய்வு செய்துவிட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்துள்ளாா் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT