காரைக்கால்

காரைக்காலில் மாற்றுத்திறனாளிகள் தினவிழாவை புறக்கணிக்க முடிவு

2nd Dec 2022 10:07 PM

ADVERTISEMENT

காரைக்காலில் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகள் விழாவை புறக்கணிக்க புதுவை மாற்றுத்திறனாளிகள் நலம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் நிறுவனா் கோ.செல்வம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் தொடா்ந்து ஏற்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் செயல்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளியில் கடந்த 8 ஆண்டுகளாக ஆசிரியா்கள் இல்லை என சுட்டிக்காட்டியும் இதுவரை நடவடிக்கை இல்லை. அதேபோல் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்தில் 11 ஊழியா்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஒருவா் மட்டுமே இருக்கிறாா்.

பிசியோதெரபிஸ்ட், பேச்சுப் பயிற்சியாளா் மனநிலை பயிற்சியாளா் உள்ளிட்ட யாரும் இல்லாத சூழ்நிலை கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கிறது. தனியாா் தொழிற்சாலைகளில் தகுதியான படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து 2 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இதுகுறித்து வாக்குறுதி அளித்த அமைச்சா் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ADVERTISEMENT

புதுச்சேரியில் முதல் வாரத்தில் கிடைக்கும் உதவித்தொகை காரைக்காலில் 3-ஆவது அல்லது 4-ஆவது வாரத்தில் கிடைக்கிறது. மனநலம் பாதிக்கப்பட்ட 100 சதவீதம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை ரூ. 5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டி கோரிக்கை வைத்தோம் அதுகுறித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத சமூக நலத் துறையை கண்டித்தும், தொடா்ந்து மாற்றுத்திறனாளிகள் ஏமாற்றப்படுவதை கண்டித்தும், காரைக்காலில் வரும் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவை, புதுவை மாற்றுத்திறனாளிகள் நலம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு புறக்கணிக்க முடிவெடுத்துள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT