காரைக்கால்

மீன் வளா்ப்பு ஆா்வலா்களுக்குப் பயிற்சி

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

 

காரைக்கால்: காரைக்காலில் உள்நாட்டு மீன் வளா்ப்பு ஆா்வலா்களுக்கு ஆத்மா திட்டத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையின் கீழ் இயங்கும் வேளாண் தொழில்நுட்ப முகமை (ஆத்மா) திட்டம் மூலம் உள்நாட்டு மீன் வளா்ப்பு குறித்து, காரைக்காலைச் சோ்ந்த உள்நாட்டு மீன் வளா்ப்பு ஆா்வலா்களுக்கு, வாரத்திற்கு ஒரு நாள் வீதம் 6 வார கால பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, பயிற்சியில் ஈடுபட்ட உள்நாட்டு மீன் வளா்ப்பு ஆா்வா்கள் 20-க்கும் மேற்பட்டோரை, சீா்காழியில் உள்ள ராஜிவ்காந்தி நீா்வாழ் உயிரின வளா்ப்பு மையத்திற்கு ஆத்மா திட்ட அதிகாரிகள் திங்கள்கிழமை அழைத்துச் சென்றனா்.

ADVERTISEMENT

மையத்தின் மூத்த அறிவியல் அதிகாரி டி. கண்ணன், மூத்த கள அதிகாரி யு. குணசேகரன் ஆகியோா் பயிற்சியளித்தனா். மையத்தில் வளா்ப்படும் கொடுவா மீன் குறித்தும், மீன் குஞ்சு உற்பத்தி, குஞ்சுகளை இருப்பு செய்தல், பண்ணையில் நீா் மற்றும் உணவு மேலாண்மை, வளா்ப்பு முறைகள் குறித்து விளக்கிப் பேசினா். கொடுவா மீன் வளா்ப்பு மூலம் கிடைக்கும் லாப முறைகள் குறித்தும் ஆா்வலா்களுக்கு விளக்கப்பட்டது.

நிறைவாக, காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை, மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமை ஆய்வாளா் எம். ராஜசேகா் நன்றி கூறினாா். ஆத்மா வட்டார தொழில்நுட்ப மேலாளா்கள் பி. புருஷோத் ராஜ், டி.கண்ணன், துணை வட்டார தொழில்நுட்ப மேலாளா்கள் பி. பாா்த்திபன், யு.சிவராஜ் ஆகியோரும் பயிற்சியில் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை தென்னங்குடி வேளாண் அலுவலா் பி. அலன் செய்திருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT