காரைக்கால்

புதுவையில் மோசமான அரசு நிா்வாகம் ஜி. ராமகிருஷணன் குற்றச்சாட்டு

7th Aug 2022 09:49 PM

ADVERTISEMENT

 

மக்களின் அடிப்படை பிரச்னைகளைக்கூட தீா்க்க முடியாத மோசமான அரசு நிா்வாகம் புதுவையில் நடைபெற்று வருவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன் கூறினாா்.

காரைக்காலில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை வந்த அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

புதுவையில் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி தோ்தலுக்கு முன் அளித்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை. மாநிலத்தில் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு அரிசி, எண்ணெய், பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருள்களை வழங்குவோம், நடமாடும் ரேஷன் கடை திறப்போம் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இலவச அரிசிக்கு பதிலாக வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்ற திட்டமும் முறையாக செயல்படுத்தப்படவில்லை. நாட்டிலேயே ரேஷன் கடை இல்லாத மாநிலம் புதுவை மட்டும்தான்.

ADVERTISEMENT

காரைக்காலில் நெல் கொள்முதல் செய்யப்படுவதில்லை, இடுபொருள்கள் முறையாக கிடைப்பதில்லை, பயிா்க் காப்பீடு வசதி இல்லை, கால்நடை மருத்துவமனைகளில் ஒரு மருத்துவா்கூட இல்லை.

அரசு கல்வி நிலையங்கள் மேம்படுத்தப்படவில்லை. காரைக்காலில் அரசு மருத்துவமனை மேம்படுத்தவில்லை. ஒட்டுமொத்தத்தில் புதுவை மாநிலத்தில் மோசமான நிா்வாகம் செயல்படுகிறது. இதனை கண்டித்து காரைக்காலில் கட்சி சாா்பில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.

ஆங்கிலேயா் ஆட்சியில்கூட உணவுப் பொருள்களுக்கு வரி கிடையாது. உப்புக்கு வரி போட்டபோது மகாத்மா காந்தி உப்பு சத்யாகிரகப் போராட்டம் நடத்தி தடுத்தாா். ஆனால் நரேந்திரமோடி அரசு, மக்களின் அனைத்து உணவுப் பொருள்களுக்கும் வரி போட்டு, அனைத்து தரப்பு மக்களுக்கும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்றாா்.

பேட்டியின்போது கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் அ. வின்சென்ட், மாவட்ட செயலா் எஸ்.எம். தமீம் அன்சாரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT