காரைக்கால்

போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீா்வுகாவல்துறை நடவடிக்கை

28th Apr 2022 05:45 AM

ADVERTISEMENT

 

காரைக்கால்: காரைக்கால் நகரில் பெண்கள் பள்ளி அருகே ஏற்பட்டுவந்த போக்குவரத்து நெரிசல் பிரச்னையை போலீஸாா் முடிவுக்கு கொண்டுவந்துள்ளனா்.

காரைக்கால் நகரப் பகுதியில் வாகனங்கள் முறையற்று நிறுத்தப்படுவதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, நேரு வீதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமாா் 2 ஆயிரம் போ் பயிலும் நிலையில், பெற்றோா் தங்களது குழந்தைகளுடன் வருவதும், மாணவியருடன் கூடிய வேன்களும் பள்ளி வாயில் அருகே குழுமியிருப்பதால், பள்ளி தொடங்கும் நேரம், முடியும் நேரத்தில் இந்த வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதுபோல நகரின் பல பகுதிகளிலும் போக்குவரத்துப் போலீஸாரின் அலட்சியத்தால், எளிய வாகனப் போக்குவரத்தை காணமுடியவில்லை.

ADVERTISEMENT

இந்த பிரச்னை குறித்து கடந்த ஏப். 24-ஆம் தேதி வெளியான தினமணியில் செய்தி வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நாரா சைதன்யா அறிவுறுத்தலின் பேரில், போலீஸாா் போக்குவரத்து நெருக்கடி பிரச்னைக்கு தீா்வு காண நடவடிக்கை மேற்கொண்டனா்.

நேரு வீதியில் உள்ள பள்ளி அருகே சாலையில் தடுப்புகளை அமைத்து, குறிப்பிட்ட தொலைவுக்கு அப்பால் குழந்தைகள் வரும் வேன்கள் நிறுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.

மேலும் இந்த தெருவில் பள்ளி தொடங்கும் நேரம், முடியும் நேரத்தில் பிற வாகனங்கள் செல்வது குறிப்பிட்ட நேரம் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவியா் சிரமமின்றி பள்ளிக்குச் செல்வதும், தங்களது வேன் நிறுத்தப்பட்டிருக்கும் பகுதிக்கு செல்வது எளிதாகியுள்ளது.

காவல் ஆய்வாளா் மரியகிறிஸ்டின் பால் தலைமையில் போலீஸாா் பள்ளி தொடங்கும் நேரம், முடியும் நேரத்தில் பள்ளி அருகே இருந்து வாகனங்களை முறைப்படுத்தி அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இதுபோல நகரின் பிற இடங்களிலும் முறையற்று சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்கும் விதமாக உறுதியான நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில், காரைக்கால் நகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்சனை தவிா்க்க முடியும் என்கின்றனா் சமூக ஆா்வலா்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT