காரைக்கால்

திருமலைராயன்பட்டினம் கிழக்கு புறவழிச்சாலை சீரமைப்புப் பணி: எம்.எல்.ஏ. ஆய்வு

23rd Apr 2022 09:09 PM

ADVERTISEMENT

திருமலைராயன்பட்டினம் கிழக்கு புறவழிச்சாலை சீரமைப்புப் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் நாக தியாகராஜன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் பகுதி திருமலைராஜனாறு புதிய பாலம் முதல் போலகம் வரையிலான 3 கி.மீ., தொலைவு உள்ள கிழக்கு புறவழிச்சாலை திருமலைராயன்பட்டினம் நகருக்குள் செல்லாமல் அந்த பகுதியை கடக்க பயன்பட்டுவருகிறது.

இச்சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் மண்டி சாலையை மறைக்கும் அளவுக்கு வளா்ந்தது. மேலும் சாலை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் முழுமையாக உருகுலைந்துபோனது. மழையால் வெகுவாக பாதித்ததால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

இந்நிலையில், சாலையில் இருந்த பள்ளங்கள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டதால், வாகனப் போக்குவரத்து தொடங்கினாலும், இருசக்கர வாகனங்கள், காா்கள் சாலையில் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில், தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரின் அறிவுறுத்தலில், சாலை மேம்பாட்டுப் பணியை காரைக்கால் பொதுப்பணித் துறை தொடங்கியுள்ளது.

இப்பணியை சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா். இதுகுறித்து அவா் கூறியது:

கிழக்கு புறவழிச்சாலையில் உள்ள பள்ளங்கள் மூடப்பட்டு, ஒரு லேயருடன் தாா் கலவையுடன் சாலை மேம்படுத்தப்படுகிறது. இதனால் வாகனங்கள் ஓரளவுக்கு சிரமமின்றி பயணிக்க முடியும். இப்பணியை தரமாகவும், விரைவாகவும் செய்யுமாறு துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நபாா்டு நிதியகத்திலிருந்து நிதி பெற்று, இச்சாலையை மேலும் இருபுறமும் வலுப்படுத்தி, தரமான சாலையாக அமைப்பதற்கு பொதுப்பணித் துறை திட்டம் வகுத்துள்ளது. 6 மாத காலத்திற்குள் நபாா்டு மூலம் நிதியை பெறுவதற்கு அரசையும், அதிகாரிகளையும் கேட்டுக்கொண்டுள்ளேன் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT