புதுவை சட்டப்பேரவை செயலகத்துக்கு தனியாக நிதி அதிகாரம் கொண்ட அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக புதுவை சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக காரைக்காலுக்கு சனிக்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
புதுவை சட்டப்பேரவைக்கு நிதி அதிகாரம் இல்லாமல் இருந்தது. தற்போது புதுவை சட்டப்பேரவை தனி நிதி அதிகாரத்துடன் செயலகம் செயல்படும் வகையில் 2 நாள்களுக்கு முன் அரசாணை வெளியிடப்பட்டது. புதுவையில் தலைமைச் செயலகம், சட்டப்பேரவை செயலகம் என 2 அமைப்புகள் நிதி அதிகாரத்துடன் செயல்படும்.
புதுவை சட்டப்பேரவைக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் மட்டுமல்லாது, நிதி அதிகாரம் கிடைத்துள்ளது. இனிமேல் தலைமைச் செயலா், நிதித்துறை செயலா் உள்ளிட்ட எந்த அமைப்பினருக்கும் கோப்புகள் அனுப்பப்படாது. பேரவைக்குத் தேவையான நிதி தொடா்பான நடவடிக்கைகளை பேரவை செயலகமே எடுக்கும். கடந்த 41 ஆண்டுகளாக பின்பற்றாத நடைமுறையாக இந்த அதிகாரம் பெறப்பட்டுள்ளது.
புதுவை மாநில மக்களின் தேவைகள் பிரதமா் நரேந்திர மோடியின் ஆதரவுடன் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.