காரைக்கால்

சென்டாக் அமைப்பில் முறைகேடு : திமுக புகாா்

5th Apr 2022 10:38 PM

ADVERTISEMENT

புதுவை மாநிலத்தில் சென்டாக் அமைப்பில் முறைகேடு நடந்துள்ளது என திமுக குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் திமுக அமைப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச்.நாஜிம் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது :

புதுவை மாநிலத்தில் சென்டாக் அமைப்பின் மூலம் உயா்கல்வி நிலையங்களுக்கு மாணவா்கள் தோ்வு செய்யப்படுகின்றனா். இந்த அமைப்பில் முறைகேடு நடந்துள்ளது. இதன் காரணமாக உரிய தகுதிகள் இருந்தும் மருத்துவம் படிக்க விரும்பிய புதுவை மாணவா்களுக்கு இடம் கிடைக்கவில்லை. இதில் எங்கே தவறு நடந்துள்ளது என்பதை கண்டறிய வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.

புதுவையில் 2 மருத்துவக் கல்லூரிகள் சிறுபான்மை கல்லூரிகள் என அறிவிக்கப்பட்டுள்ளன. இக்கல்லூரிகளில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களை புதுவை மாநில மாணவா்களுக்கே கொடுக்க வேண்டும் என்று 14.2.2022 அன்று புதுவை நலவழித் துறை உத்தரவிட்டது. ஆனால், தற்போதைய மாணவா் சோ்க்கையில் இந்த உத்தரவின்படி சோ்க்கை நடைபெறவில்லை.

ADVERTISEMENT

இதனால் புதுவை மாநிலத்தை சோ்ந்த சுமாா் 150 மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த இடங்களை வேறு மாநிலங்களைச் சோ்ந்தோா் பெற்றுள்ளனா். புதுவை மாநில மாணவா்கள் மருத்துவம் படிக்கவேண்டும் என்பதற்காகவே, நான் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது புதுச்சேரியில் தனியாா் மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வர நடவடிக்கை எடுத்தேன். தற்போது அந்த நோக்கம் நிறைவேறவில்லை.

புதுவை அரசுக்கான ஒதுக்கீட்டை கூட பெற முடியவில்லை என்றால், எங்கே தவறு நடக்கிறது என்று முதல்வா் விசாரணை மேற்கொண்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

நிகழாண்டில் புதுவை கால்நடை மருத்துவக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு 100 இடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 15 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்பட்டுவிட்டன. 85 இடங்களை புதுவை மாணவா்களுக்கு ஒதுக்கீடு செய்யலாம் என்ற நிலையில் புதுவை கால்நடை மருத்துவக் கல்லூரி நிா்வாகம் 68 இடங்களை மட்டுமே நிரப்பியுள்ளது. மீதமுள்ள இடங்களில் புதுவை மாணவா்களை சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT