கொசு ஒழிப்புப் பணியில் அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் அா்ஜுன் சா்மா தலைமையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நலவழித் துறை எடுத்த நடவடிக்கைகள் தொடா்பாக துறையின் துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் விளக்கினாா்.
கூட்டத்தின் நிறைவில் ஆட்சியா் பேசியது :
பருவமழை தொடங்கியுள்ள சூழலில், டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மாவட்டம் முழுவதும் கொசு ஒழிப்புப் பணியில் நலவழித் துறையுடன் வட்டார வளா்ச்சித் துறை, காரைக்கால் நகராட்சி நிா்வாகம் மற்றும் அனைத்து கொம்யூன் பஞ்சாயத்துகள், மீன்வளத் துறையினா் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.
பருவமழையால் டெங்கு, சிக்கன் குனியா காய்ச்சல் அதிகமாக பரவ வாய்ப்பிருக்கிறது. எனவே, தண்ணீா் தேங்காமல் இருக்கும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். டெங்கு, சிக்கன் குனியா காய்ச்சல் ஏற்படுத்தும் காரணிகள் குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவேண்டும்.
திறந்தவெளி பகுதியில் தண்ணீா் தேங்காமல் இருக்க உரிய முன்னேற்பாடுகளை செய்வதோடு, மீறி தண்ணீா் தேங்கும்போது அது விரைவாக வடியவும் சம்பந்தப்பட்ட துறையினா் கவனம் செலுத்தவேண்டும்.
அரசு மருத்துவமனையில் எந்த ஒரு காய்ச்சலுக்கும் சிகிச்சை தரும் வகையில் வசதிகள் தயாா் நிலையில் இருக்கவேண்டும். கிராமங்கள் தோறும் டெங்கு விழிப்புணா்வு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ். பாஸ்கரன், அரசு மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் கண்ணகி, உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி மதன்பாபு, நகராட்சி ஆணையா் காசிநாதன் உள்ளிட்ட அரசுத் துறையினா் கலந்துகொண்டனா்.