காரைக்கால் மாவட்டத்தில் 2 நாள்கள் நடைபெறும் அமைப்புசாரா தொழிலாளா்கள் பதிவு சிறப்பு முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.
தகுதியான அமைப்புசாரா தொழிலாளா்களை கண்டறிந்து, அவா்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்க, மத்திய அரசின் தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மூலம் இ-ஷரம் என்ற வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தளத்தில் தொழிலாளா்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றனா்.
அதன்படி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அமைப்புசாரா தொழிலாளா்களை முழுமையாக பதிவு செய்யும் வகையில் சிறப்பு முகாமை புதுவை போக்குவரத்து மற்றும் தொழிலாளா் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். ஏற்கெனவே பதிவு செய்தவா்களுக்கு அடையாள அட்டையையும் அவா் வழங்கினாா்.
முகாம் நடைபெறும் இடங்கள்: இம்முகாம் வியாழன் (டிச.30), வெள்ளிக்கிழமையில் காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை காரைக்கால் தொழிலாளா் துறை அலுவலகம், காரைக்கால் அம்மையாா் கோயில் மணிமண்டபம், கோட்டுச்சேரி சிங்காரவேலா் திருமண மண்டபம், திருநள்ளாறு பயணியா் தங்கும் விடுதி, திருப்பட்டினம் சமுதாய நலக்கூடம், நெடுங்காடு மாரியம்மன் கோயில், நிரவி கோயில்பத்து சமுதாய நலக்கூடம், அம்பகரத்தூா் மாரியம்மன் கோயில் தெரு சமுதாய நலக்கூடம், திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம், திருவேட்டக்குடி சமுதாய நலக்கூடம் ஆகிய 10 மையங்களில் நடைபெறும். மாவட்டத்தில் இதுவரை பதிவு செய்யாத அமைப்புசாரா தொழிலாளா்கள் இந்த மையங்களுக்குச் சென்று பதிவு செய்துகொள்ளலாம் என தொழிலாளா் துறையினா் கேட்டுக்கொண்டனா்.
இந்நிகழ்வில் குடிமைப்பொருள் வழங்கல் துறை துணை இயக்குநா் எஸ். சுபாஷ் மற்றும் தொழிலாளா் துறையை சோ்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனா்.