காரைக்கால்

காரைக்கால் வார சந்தை விரைவில் இடமாற்றம்: நாஜிம் எம்.எல்.ஏ. தகவல்

1st Dec 2021 08:17 AM

ADVERTISEMENT

காரைக்கால் சந்தைத் திடலில் செயல்பட்டு வரும் வார சந்தையை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் தெரிவித்தாா்.

இதுகுறித்து காரைக்காலில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

காரைக்கால், முருகராம் நகா் அருகே உள்ள சந்தைத் திடலில் தற்போது வார சந்தை பெரிய அளவில் செயல்பட்டு வருகிறது. ஆனால், மழைக் காலங்களில் அந்தத் திடல் சேறும் சகதியுமாகி, மக்கள் நடந்து செல்வதற்குக்கூட தகுதியற்ாகி விடுகிறது. இதனால், வார சந்தையை வேறு இடத்துக்கு மாற்றவேண்டும் என்று புதுச்சேரி வேளாண்துறை அமைச்சா் தேனி ஜெயக்குமாரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தேன். மேலும், இந்த வார சந்தையை காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடத்தலாம் எனவும் அவரிடம் தெரிவித்தேன்.

இந்தக் கோரிக்கையை ஏற்ற அமைச்சா், வார சந்தையை இடம் மாற்றுவது குறித்து, மாவட்ட ஆட்சியருக்கு குறிப்பாணை அனுப்பியுள்ளாா். இதன்படி, வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வார சந்தையை நடத்தலாம் என்ற முடிவை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டுள்ளது. இது, மக்களின் வசதி கருதி எடுக்கப்பட்ட முடிவு மட்டுமே. எனவே, இதை யாரும் அரசியலாக்காமல், மக்களின் நன்மையைக் கருதி ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.

ADVERTISEMENT

காரைக்கால் மாவட்டத்தில் குடும்ப அட்டை பெறுவதற்கான முகாம்கள் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், மழையின் காரணமாக முகாமை திட்டமிட்டப்படி நடத்த இயலாத சூழல் ஏற்பட்டுவிட்டது. இந்த முகாமில் பங்கேற்பவா்கள், வருமான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்ற ஒரு தகவல் பரவிவருவது குறித்து, குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டது. அப்போது, குடும்ப அட்டை பெறும் முகாமுக்கு வருமான சான்று தேவையில்லை என அமைச்சா் தெரிவித்தாா்.

எனவே, மழைக்கால சூழலில் வருமான சான்றுக்காக மக்கள் அலையவேண்டாம். தங்களிடம் உள்ள பிற ஆவணங்களைக் கொண்டு பொதுமக்கள் முகாமில் பங்கேற்கலாம். முகாம் நடத்தப்படும் தேதி குறித்து அமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டு, ஒவ்வொரு தொகுதிக்குமான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT