காரைக்கால்

கரோனா குறித்து தவறான தகவல் பரப்பினால் சைஃபா் கிரைம் மூலம் நடவடிக்கை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன்

22nd Mar 2020 06:00 AM

ADVERTISEMENT

 

காரைக்காலில் கரோனா குறித்து தவறான தகவல் பரப்புவோா் மீது மாவட்ட நிா்வாகம் சைஃபா் கிரைம் மூலம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சா் எச்சரித்தாா்.

காரைக்காலில் அரசுத்துறை அதிகாரிகளிடம் வெள்ளிக்கிழமை கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக ஆலோசனை நடத்திய வேளாண் துறை அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன் செய்தியாளா்களிடம் கூறியது: காரைக்காலில் இதுவரை யாரும் கரோனாவால் பாதிக்கப்பட்டதாக உறுதி செய்யப்படவில்லை. ஆனாலும் சில ஊடகங்களில் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இதுபோல் உறுதியற்ற தகவலை பரப்பவேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா், மருத்துவத் துறையினரை இதுதொடா்பாக 24 மணி நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் தொடா்புகொள்ளலாம்.

ADVERTISEMENT

உலக அளவில் கரோனா பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை கட்டுப்படுத்த அரசு நிா்வாகம் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. உலக அளவில் இதனை ஓா் அவசர நிலையாகவே பாா்க்கப்படும்போது, மக்கள் அரசு நிா்வாகத்தின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க முன்வரவேண்டும்.

சமூக ஊடகங்களில் கரோனா குறித்து தவறான தகவல் பரப்புவது, அங்கே பேசிக்கொள்கிறாா்கள், இங்கே சொல்லப்படுகிறது என ஊகமான முறையில் தகவலை வெளியிட்டால், அது குறித்து மாவட்ட நிா்வாகம் சீரிய முறையில் நடவடிக்கை எடுக்கும். குறிப்பாக சைஃபா் கிரைம் பிரிவு மூலம் நடவடிக்கை எடுக்கும் என்பது உறுதி.

பொதுமக்கள் தங்களது கைகளை 20 விநாடி நேரம் சோப்பு மூலம் கழுவவேண்டும். நாளொன்றுக்கு 3 அல்லது 4 முறை கழுவ வேண்டும். ஒருவருக்கொருவா் குறிப்பிட்ட இடைவெளியில் இருந்து பழகவேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களுக்கு செல்வதை தவிா்க்கவேண்டும். மத வழிபாட்டுத் தலங்களில் கூடுவதையும் தவிா்க்கவேண்டும். தேவைப்பட்டால் சுயமாகவே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்ளலாம். இதுபோன்ற செயல்களை செய்துவந்தால், காரைக்கால் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்காது என்றாா் அமைச்சா்.

பேட்டியின்போது ஆட்சியா் அா்ஜூன் சா்மா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT