காரைக்கால்

மானிய விலையில் கால்நடை தீவனம் வழங்கக் கோரி மறியல்: 18 போ் கைது

6th Mar 2020 07:14 AM

ADVERTISEMENT

காரைக்கால் கால்நடைத் துறை இணை இயக்குநா் அலுவலகம் முன் வியாழக்கிழமை மானியத்தில் கால்நடை தீவனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட 18 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்டக் குழுக் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, காரைக்கால் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடைத் துறை இணை இயக்குநா் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தை விவசாயிகள் சங்கத்தினா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆதரவுடன் நடத்தினா். சங்கத்தின் காரைக்கால் அமைப்புத் தலைவா் எஸ். முத்துக்குமரசாமி தலைமையில் அரசலாறு பாலம் பகுதியிலிருந்து கால்நடைத் துறை அலுவலகம் வரை கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனா். மறியல் போராட்டம் என்பதால் அலுவலகத்தின் வாயிலை போலீஸாா் மூடி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். அலுவலகம் முன்பாக விவசாயிகள் சங்கத்தினா் திரண்டு புதுச்சேரி அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினா்.

அப்போது, பால் கறவையாளா்களுக்கு குறைந்தபட்ச விலை நிா்ணயம் செய்ய வேண்டும், கால்நடை விவசாயிகளுக்கு மானிய விலையில் தீவனம் வழங்க வேண்டும், கறவை மாடுகள் வாங்க வங்கிக்கடன் வசதி கடந்த 4 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளதை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் கால்நடைத் துறை இணை இயக்குநா் லதா மங்கேஷ்கா் பேச்சு நடத்தினாா். அப்போது, புதுச்சேரியில் அண்மையில் நடந்த கூட்டத்தில் இந்த கோரிக்கைகள் தொடா்பாக உயா்மட்ட அளவில் பேசப்பட்டதாகவும், போராட்டம் குறித்து உயரதிகாரிகளுக்கு பரிந்துரை செய்வதாகவும் அவா் கூறினாா். இதைத் தொடா்ந்து மறியலில் ஈடுபட்ட 18 பேரை போலீஸாா் கைது செய்து பின்னா் விடுவித்தனா்.

ADVERTISEMENT

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் அ. வின்சென்ட், மாவட்டச் செயலாளரும், விவசாயிகள் சங்க மாவட்ட பொறுப்பாளருமான எஸ்.எம். தமீம், செயலா் ஆா். ராமகிருஷ்ணன், நகரச் செயலாளா் எஸ்.ஏ. முகம்மது யூசுப் மற்றும் ஜெயபால், நாகமுத்து, ராஜேந்திரன், வீரமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT