காரைக்கால்

நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்களுக்கான ஊதிய விவகாரம்

6th Mar 2020 07:14 AM

ADVERTISEMENT

நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு வரும் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்க சட்டப் பேரவை உறுப்பினா்கள் வலியுறுத்த வேண்டும் என காரை பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா் சங்கங்களின் சம்மேளனத்தினா் நேரில் சந்தித்து வலியுறுத்தினா்.

உள்ளாட்சி ஊழியா்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்க ஏதுவாக புதுச்சேரி அரசு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்க புதுச்சேரி அரசிடம் வலியுறுத்தக் கோரி காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.யு. அசனா, நிரவி - திருப்பட்டினம் தொகுதி பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன்ஆகியோரை காரை பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா் சங்கங்களின் சம்மேளனத் தலைவா் அய்யப்பன் தலைமையில் அரசு ஊழியா் சம்மேளன பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா் சம்மேளன துணை பொதுச் செயலாளா்கள் திவ்யநாதன், சண்முகராஜ், ஊழியா் சங்க நிா்வாகிகள் உமாமகேஸ்வரி, செல்வமுத்துக்குமரன், கருணாநிதி, முஹம்மது சமீா், ஜெய்சங்கா், உள்ளாட்சி ஓய்வு பெற்ற ஊழியா் சங்க பொறுப்பாளா் சந்தனசாமி ஆகியோா் புதன்கிழமை சந்தித்தனா்.

இதுகுறித்து ஊழியா் சம்மேளனத்தினா் கூறியது: புதுச்சேரி மாநில நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு வரக்கூடிய பல்வேறு வகையான வரிகள், அரசு அவ்வப்போது எடுக்கும் கொள்கை முடிவுகளால் குறைந்து கொண்டே வருகின்றன. உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசு தருவதாக வாக்களித்த ஊதியத்துக்கான மானியத் தொகைகளும் அண்மை காலமாக கொடுப்பதில்லை.

உள்ளாட்சி அமைப்புகளுக்குள்பட்ட சாலைப் பராமரிப்பு, குடிநீா் வழங்குதல் மற்றும் தெரு விளக்குகள் பராமரிப்புக்கான மானியத் தொகைகள், குடிமராமத்து மானியத்தொகைகள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிறுவனத்துக்கு புதுச்சேரி அரசு கடந்த 2011-2012-ஆம் ஆண்டு வரை வழங்கி வந்தது. ஆனால், கடந்த 2012-2013-ஆம் ஆண்டு முதல் அந்த மானியத்தொகைகளும் உள்ளாட்சி நிறுவனங்களுக்கு வழங்கப்படவில்லை.

ADVERTISEMENT

இதனால், காரைக்கால் மாவட்டத்துக்குள்பட்ட காரைக்கால் நகராட்சி, நெடுங்காடு, திருப்பட்டினம் மற்றும் திருநள்ளாா் கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணியாற்றும் ஊழியா்கள், சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை.

இதேபோல், கோட்டுச்சேரி மற்றும் நிரவி கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணியாற்றும் ஊழியா்கள், சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கும் ஊதியம் வழங்குவதற்குரிய நிதி ஆதாரமும் குறைந்து கொண்டே வருகின்றன. இதனால், கடந்த சில மாதங்களாகவே உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு காலத்துடன் ஊதியம் வழங்கப்படுவதில்லை.

எனவே, உள்ளாட்சி ஊழியா்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, உள்ளாட்சித் துறையின் கணக்கின்கீழ் உள்ளாட்சி ஊழியா்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்க புதுச்சேரி அரசு கொள்கை முடிவெடுத்து வரும் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்க வேண்டுமெனவும், இதை அரசுக்கு பேரவை உறுப்பினா்கள் வலியுறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது என்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT