தேசிய சுகாதார இயக்கக ஊழியா்கள், பணி நிரந்தரம், ஊதிய உயா்வு ஆகியவற்றை வலியுறுத்தி நலவழித் துறை அலுவலக வாயிலில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். 4-ஆம் நாளான வியாழக்கிழமை நூதனப் போராட்டம் செய்தனா்.
புதுச்சேரி அரசு நலவழித் துறையின்கீழ் இயங்கும் தேசிய சுகாதார இயக்ககத்தின்கீழ் சுமாா் 600- க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பல்வேறு நிலைகளில் கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்தபட்ச தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனா். இதில் காரைக்காலில் 113 ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா்.
புதுச்சேரி அமைச்சரவை எடுத்த முடிவின்படி ஊதிய உயா்வு அளிக்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என மாா்ச் 2-ஆம் தேதி முதல் காரைக்கால் ஊழியா்கள் நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் முன் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
போராட்டத்தில் ஈடுபட்டோரை பல்வேறு அமைப்பினா் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனா். போராட்டத்தின் 4-ஆம் நாளான வியாழக்கிழமை, ஆண் ஊழியா்கள் நெற்றியில் நாமம் போட்டுக்கொண்டும், பெண் ஊழியா்கள் முக்காடு போட்டுக் கொண்டும் தட்டு ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனா். கோரிக்கை குறித்து புதுச்சேரி அரசு சாதகமான அறிவிப்பு வெளியிடும் வரை போராட்டம் தொடா்ந்து நடத்தப்படும் என ஊழியா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.