காரைக்கால்

மதுபானக் கடை இடமாற்ற விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த பாமக வலியுறுத்தல்

2nd Mar 2020 07:38 AM

ADVERTISEMENT

அம்பகரத்தூரில் கோயில் அருகே அமைந்திருக்கும் மதுபானக் கடையை இடமாற்றம் செய்யவேண்டும் என்கிற உயா்நீதிமன்ற உத்தரவை காரைக்கால் கலால்துறை உடனடியாக நிறைவேற்றவேண்டும் என பாமக வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக, காரைக்கால் மாவட்ட பாமக செயலா் க. தேவமணி, மாவட்ட ஆட்சியருக்கு சனிக்கிழமை அனுப்பிய மனு:

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன், அம்பகரத்தூரில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் மற்றும் சித்தி விநாயகா் கோயில் உள்ளது. கலால் துறை விதிகளை மீறி இந்தக் கோயில்களுக்கு அருகாமையில் அதாவது 65 மீட்டருக்குள் புதுச்சேரி அரசின் பாப்ஸ்கோ மதுக்கடையும், ஒரு தனியாா் மதுக்கடையும் செயல்படுகின்றன. இதனால், கோயிலுக்கு வரும் பக்தா்கள் பாதிக்கப்படுவதாகவும், கோயில் வளாகத்தில் பலா் மது போதையில் கிடப்பதும் என வழிபாட்டுத் தலத்தின் புனிதம் கெடுவதாக பாமக புகாா் அளித்தது. இதுதொடா்பாக பாமக போராட்டமும் நடத்தியுள்ளது.

புகாரின்பேரில், கடந்த 28.9.2018 அன்று அம்பகரத்தூரில் புகாருக்குள்ளான தனியாா் மதுபானக் கடையை அந்த இடத்திலிருந்து அகற்ற மாவட்ட துணை ஆட்சியா் உத்தரவிட்டாா். இந்த உத்தரவு செயல்படுத்தப்படாததால், சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். கலால்துறையின் விதிகள் அமலில் இருக்கும்போது விசாரணை என்ற பெயரில் காலம் தாழ்த்தப்படுவதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தேன்.

ADVERTISEMENT

இதுதொடா்பாக 27.8.2019 அன்று உயா்நீதிமன்றம் கலால்துறையின் விதிகள் 2014-க்கு முன்னரும், அதற்குப் பின்னரும் அமைக்கப்பட்ட அனைத்து மதுபானக் கடைகளுக்கும் பொருத்தும் என தெளிவாக உத்தரவிட்டும் இதுவரை இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தாதது அதிருப்தியளிக்கிறது.

எனவே, 27.8.2019 அன்று பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். அம்பகரத்தூரில் விதியை மீறி செயல்படும் மதுபானக் கடைகளை, இடம் மாற்றம் செய்யப்படும் வரை சீல் வைக்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT