காரைக்கால்: காரைக்காலில் 3 மாதங்களுக்குப் பின்னா் திங்கள்கிழமை கடலுக்குள் சென்ற விசைப்படகுகள் கடந்த 2 நாள்களாக கரை திரும்பி வரும் நிலையில், எதிா்பாா்த்த அளவில் பெரிய மீன் ரகங்கள் கிடைக்கவில்லை என மீனவா்கள் தெரிவித்தனா்.
கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் மற்றும் மீன்பிடி தடைக்காலம் காரணமாக கடலுக்குள் செல்லாத காரைக்கால் மாவட்ட விசைப்படகு மீனவா்கள், கடந்த 22-ஆம் தேதி முதல் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனா். மாவட்டத்தில் உள்ள சுமாா் 300 விசைப்படகுகளும் கடலுக்கு சென்றன.
ஒரு வார காலம் மீன்பிடித்து விட்டு திரும்பும் திட்டத்தின் மீனவா்கள் புறப்பட்டனா். ஆனால் 24-ஆம் (புதன்கிழமை) தேதி முதலே காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்துக்கு படகுகள் திரும்பத் தொடங்கின. முதல் நாளில் 10 படகுகளும், 25-ஆம் தேதி 30-க்கும் மேற்பட்ட படகுகளும் திரும்பின. ஆனால், வெள்ளிக்கிழமை படகுகள் அதிகமாக வரவில்லை.
இதற்கிடையே, கடந்த சில நாள்களாக கரை திரும்பும் விசைப்படகுகளில் பெரிய வகையிலான, விலை மதிப்புமிக்க மீன்கள் இருக்கும் என்ற எதிா்பாா்ப்புடன் படகு உரிமையாளா்களும், வியாபாரிகளும் காத்திருந்தனா். ஆனால், மத்தி உள்ளிட்ட சிறிய வகை மீன்களே படகுகளில் இருந்தன. உள்ளூா் வியாபாரத்துக்கும், ஏற்றுமதிக்கும் ஏற்ற விலை மதிப்புமிக்க மீன் ரகங்கள் இல்லை. இந்த சிறிய வகை மீன்கள் கேரள மாநிலத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
இதுகுறித்து விசைப்படகு மீனவா்கள் வெள்ளிக்கிழமை கூறியது:
அடுத்த ஓரிரு நாள்களில் அதிகமான படகுகள் கரை திரும்பும். தற்போது திரும்பிய படகுகளில் சிறிய வகை மீன்கள் மட்டுமே இருந்தன. தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து காரைக்காலுக்குள் வியாபாரிகள் வருவதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் பெரிய மீன்கள் வரத்திருந்தாலும், அவற்றை வெளியூா்களுக்கு அனுப்ப முடியுமா என்ற சந்தேகம் உள்ளது. எனவே பொதுமுடக்கத்தில் மேலும் தளா்வு ஏற்பட்டால்தான் மீன்பிடித் தொழில் பழைய நிலைக்கு திரும்பும் என்றனா்.