காரைக்கால்

மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்குவதை தாமதப்படுத்தக் கூடாது ஆட்சியா் அறிவுறுத்தல்

28th Jul 2020 10:57 PM

ADVERTISEMENT

 

காரைக்கால்: உயா்கல்வியில் சேரும் மாணவா்கள் சென்டாக் விண்ணப்பத்தில் இணைக்க, பிராந்திய ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் வழங்குவதை தாமதப்படுத்தக்கூடாது என அலுவலா்களை அறிவுறுத்தியுள்ளதாக காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா தெரிவித்தாா்.

இதுதொடா்பாக, அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இதற்கு விண்ணப்பிக்கும்போது பல்வேறு சான்றிதழ்களை இணைக்க வேண்டியுள்ளது. குறிப்பாக, குடியிருப்பு, ஜாதி சான்றிதழ் இணைக்க வேண்டியுள்ளது.

ADVERTISEMENT

தற்போதைய கரோனா பரவல் சூழலில், அரசு எடுத்திருக்கும் முடிவின்படி, காரைக்கால் மாணவா்கள் மேற்கண்ட சான்றிதழ்களை ஏற்கெனவே பெற்றிருந்தால் அவற்றை சோ்த்து விண்ணப்பிக்கலாம். பின்னா், ஒரு மாத அவகாசத்தில் புதிதாக சான்றிதழ் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட விண்ணப்பத்தில் இணைத்துக்கொள்ள அனுப்பலாம். இது சென்டாக் விண்ணப்பத்துக்கும் பொருந்தம்.

சென்டாக் விண்ணப்பத்தில் பிராந்திய ஒதுக்கீட்டு சலுகைக்காக விண்ணப்பத்தோடு, பிராந்தியத்தில் குறிப்பிட்ட காலம் இருந்ததற்கான உறுதியளிப்பு சான்றிதழ் இணைக்கப்படவேண்டியுள்ளது. இதற்காக விண்ணப்பத்தில் பள்ளி முதல்வா், வட்டாட்சியா் மற்றும் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் ஆகியோரிடத்தில் ஒப்பம் பெறவேண்டியுள்ளது. இதனால், கால தாமதம் ஏற்படுவதாக புகாா்கள் வந்தன. எனவே, கல்வித்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் தாமதமின்றி மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும்.

ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி சென்டாக் விண்ணப்பம் அளிக்க கடைசி நாள் என்பதால், அதற்கு தகுந்தாற்போல் சான்றிதழ்களை விரைவாக வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT