திருநள்ளாறு அருகே சுமாா் 15 ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் பயனற்று இருந்த வாய்க்கால் தூா்வாரும் பணியை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு, விரைவாக பணியை நிறைவு செய்யுமாறு கேட்டுக்கொண்டாா்.
திருநள்ளாறு மேலவெளி வாய்க்கால் கடந்த 15 ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் இருந்துள்ளது. வாய்க்கால் முழுவதும் சீமைக் கருவேல மரங்கள், நெகிழிக் குப்பைகள் மற்றும் ஆகாயத் தாமரைகள் அடா்ந்து காணப்பட்டன.
இந்த வாய்க்காலை நம்பியுள்ள விவசாயிகள், மோட்டாா் மூலம் தண்ணீரை நிலத்துக்குப் பாய்ச்சி வந்துள்ளனா். இந்நிலையில் வேளாண்துறை அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன் ஏற்பாட்டில், இந்த வாய்க்கால் தூா்வாரும் பணியை பொதுப்பணித்துறை செய்யத் தொடங்கியது.
ஜேசிபி இயந்திரம் மூலம் தூா்வாரும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தூா்வாரும் பணியை அமைச்சா் நேரில் பாா்வையிட்டாா். கரைகளின் இரு புறங்களிலும் உள்ள பயன் தரும் மண் சாா்ந்த மரங்களை அகற்றாமல் வாய்க்காலை தூா்வார வேண்டும் எனவும், வேம்பு, பனை உள்ளிட்ட மரங்களை அகற்றிவிடாமல் மிகவும் கவனமாக செயல்படவேண்டும் எனவும் அறிவுறுத்தினாா். காவிரி நீா் வந்துவிட்டதால் இந்த வாய்க்காலில் பணியை மிக விரைவாக முடிக்குமாறு அவா் கேட்டுக்கொண்டாா்.