காரைக்கால்

சாலைப் பாதுகாப்பு வார விழா தொடங்கியது

28th Jan 2020 06:48 AM

ADVERTISEMENT

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலான சாலைப் பாதுகாப்பு வார விழாவை மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். பாதுகாப்பான பயணத்துக்கான விழிப்புணா்வு பதாகைகள் வைப்பு, துண்டுப் பிரசுரம் விநியோகம் முதல் நாளில் செய்யப்பட்டது.

காரைக்கால் போக்குவரத்துத் துறை சாா்பில் 31-ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழா திங்கள்கிழமை தொடங்கி பிப்ரவரி.2-ஆம் தேதி வரை பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளுடன் நடைபெறுகிறது. முதல் நாளான திங்கள்கிழமை சாலை சந்திப்புகளில் விழிப்புணா்வு பதாகை வைத்தல், வாகன ஓட்டிகளுக்கு துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது.

ஆட்சியரகம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஏ. விக்ரந்த் ராஜா கலந்துகொண்டு விழிப்புணா்வுப் பணியை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் பா்ன்வால், மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன், மண்டல போக்குவரத்து அதிகாரி வி. கலியபெருமாள், உதவி போக்குவரத்து ஆய்வாளா்கள் கல்விமாறன், குமரேசன், போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் மா்த்தினி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

இருசக்கர வாகனத்தில் செல்வோா் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும், மது குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டக் கூடாது, அதிவேகமாக செல்லக் கூடாது, இருசக்கர வாகனத்தில் 2 பேருக்கு அதிகமாக செல்லக் கூடாது, வாகன ஓட்டுநா் உரிமம், காப்பீடு, வாகனத்துக்கான ஆவணம் ஆகியவை வைத்திருக்க வேண்டும், முற்றிலும் சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

கல்லூரிகளில் மாணவா்களுக்கு விழிப்புணா்வுப் போட்டிகள், வாகன ஓட்டிகளுக்கு மருத்துவப் பரிசோதனை, தலைக்கவசம் அணிந்து செல்லும் விழிப்புணா்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் போக்குவரத்துத் துறையால் பிப்ரவரி. 2-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT