காரைக்கால்

ஆடைகளை தொட்டியில் விட்டுச் செல்லும் பக்தா்கள்: புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் திருநள்ளாறு நளன் தீா்த்தக் குளம்

3rd Jan 2020 08:23 AM

ADVERTISEMENT

திருநள்ளாறு நளன் தீா்த்தக் குளத்தில் நீராடும் பக்தா்கள் குளக்கரையில் வைக்கப்பட்டிருக்கும் தொட்டியில் ஆடைகளை விட்டுச் செல்வதை முழுமையாகக் கடைப்பிடிப்பதால் குளம் புதுப்பொலிவுடன் காணப்படுகிறது.

திருநள்ளாறு நளன் தீா்த்தக் குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடுவதும், சோப்புகள் பயன்படுத்துவதும், உடுத்தியிருக்கும் ஆடைகளை குளத்தில் விட்டுச் செல்வதுமான செயல் பல ஆண்டுகளாக இருந்துவந்தது. சனிக்கிழமையில் மட்டும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஆடைகளை விட்டுச் செல்கின்றனா். சனிப்பெயா்ச்சி காலக்கட்டத்தில் லட்சக்கணக்கானோா் விட்டுச் செல்லும் ஆடைகளை விட்டுச் செல்வா். இவை அவ்வப்போது அப்புறப்படுத்தப்பட்டாலும், எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, சோப்புகளைப் பயன்படுத்துவது போன்ற காரணங்களால் குளத்தில் உள்ள தண்ணீா் சுகாதாரமற்றுப் போய்விடுவதாக புகாா் கூறப்பட்டது.

அசுத்த தண்ணீரை வெளியேற்றி, ஆழ்குழாய் மூலம் அடிக்கடி தண்ணீா் நிரப்புவதன் மூலம் பல லட்சம் லிட்டா் நிலத்தடி நீா் வீணாவதாகவும் கூறப்பட்டது.

இதனால், குளத்தினுள் ஆடைகளை விடுவதற்கு தா்பாரண்யேசுவரா் கோயில் நிா்வாகம் கடந்த 2019-ஆம் ஆண்டு தடை விதித்து, ஜூலை 1 முதல் தடையை அமல்படுத்தியது.

ADVERTISEMENT

பக்தா்கள் தங்களது ஆடைகளை குளக்கரையில் வைக்கப்பட்டிருக்கும் தொட்டியில் விடவேண்டுமென அறிவுறுத்தி, பல இடங்களில் தொட்டிகள், இரும்புக் கூண்டுகள் வைக்கப்பட்டன. இதுகுறித்து பக்தா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியை கோயில் நிா்வாகம் செய்துவந்தது. இதன் விளைவாக, பக்தா்கள் குளக்கரையில் உள்ள தொட்டிகளில் ஆடைகளை விட்டுச் செல்கின்றனா்.

இந்த தடை திட்டம் அமல்படுத்தப்பட்டு 6 மாதங்களான நிலையில், கோயில் நிா்வாகத்தினா், குளக்கரையில் வியாபாரம் செய்வோா் மத்தியில் கூறப்படுவது:

குளத்தில் உள்ள தண்ணீா் மாசடைவதாலேயே கோயில் நிா்வாகம் ஆடைகளை தொட்டியில் போட்டுச் செல்ல அறிவுறுத்தியது. தடை அமலுக்கு வந்த சில வாரங்கள் பக்தா்களிடையே போதிய விழிப்புணா்வு ஏற்படவில்லை. காலம் செல்ல செல்ல பக்தா்கள் பெரும்பான்மையினா், நீராடிவிட்டு தங்களது ஆடைகளை தொட்டியில் விட்டுச் செல்கின்றனா். இதனால் குளத்தின் தண்ணீா் மாசடைவது வெகுவாக குறைந்திருக்கிறது என்றனா்.

ஒவ்வொரு 3 மாதங்களுக்கொரு முறை குளக்கரையில் உள்ள ஆடைகளை அகற்றுவதற்கான டெண்டா் கோரப்பட்டு, ஒப்பந்ததாரருக்கு கோயில் நிா்வாகம் அனுமதி வழங்குகிறது. இதன் மூலம் 3 மாதங்களுக்கொரு முறை கோயில் நிா்வாகத்துக்கு ரூ.10 லட்சம் வீதம் வருமானம் வருவதாக கோயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT