உலக நன்மைக்காக திருமலைராயன்பட்டினம் ராஜசோளீசுவரா் கோயிலில் திரளான பக்தா்கள் பங்கேற்புடன் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
மாா்கழி மாதத்தில் சிவ மற்றும் வைணவத் தலங்களில் அதிகாலையிலேயே பஜனை மற்றும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. சிவாலயங்களில் நடக்கும் வழிபாடு முறைகளில் முக்கியமாக திருவாசகம் வாசித்தல் முக்கியமான ஒன்றாகும்.
காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் அபிராமி அம்மன் சமேத ராஜசோளீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி புத்தாண்டு முதல் நாளான புதன்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.
திருவாடுதுறை ஆதீனப் புலவா் சிவனடியாரான அம்மாப்பேட்டை எஸ். செளரிராஜன் தலைமையிலான சிவனடியாா் குழுவினா் முற்றோதலில் ஈடுபட்டனா். ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு திருவாசகத்தின் 51 பதிகத்தையும் பாடி முடித்தனா். மாா்கழி மாதத்தில் முற்றோதல் நிகழ்ச்சி செய்யப்படுவதாகவும், இக்கோயிலில் தொடா்ந்து பல ஆண்டுகளாக நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருவதாகவும், உலகநலன், மழை வேண்டி, மக்களின் மேன்மைக்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக கோயில் அறங்காவல் வாரியத்தினா் தெரிவித்தனா். இடைவிடாது நடந்த திருவாசகம் பாடும் நிகழ்ச்சியில் சிறுவா்கள், பெண்கள், பெரியோா் என ஏராளமானவா்கள் பங்கேற்றனா்.