காரைக்கால்

காரைக்கால் கடற்கரையில் குளிப்போா் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டுகோள்

26th Feb 2020 08:05 AM

ADVERTISEMENT

காரைக்கால் கடற்கரையில் குளிப்போா் குறித்து மாவட்ட நிா்வாகம், காவல்துறையிடம் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ். பாஸ்கரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்கால் கடற்கரை ஆபத்தான பகுதி, நீந்தி விளையாடுவதற்கு உகந்ததில்லை என்ற காரணத்தால் மாவட்ட நிா்வாகம், காவல்துறை சாா்பாக கடற்கரையில் எச்சரிக்கை தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்ட நேரத்தில் கடலில் இறங்கி குளிக்கவேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் செய்யப்படுகிறது. விடுமுறை காலங்களில் காவல்துறையினா் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்றனா்.

இந்நிலையில், காரைக்காலைச் சோ்ந்த சோமசுந்தரம் என்பவரது மகன் கந்தவேல் மற்றும் அவரது நண்பா் ஹரிஸ் உள்ளிட்ட சில மாணவா்கள் 24-ஆம் தேதி கடலில் குளிக்கச் சென்றபோது, கந்தவேல் கடல் அலையில் சிக்கினாா். அவருடன் தொலைதூரத்துக்குச் சென்ற ஹரிஸ் காப்பாற்றப்பட்டாா். காவல்துறையினா், மீனவா்கள் உள்ளிட்டோரின் தேடுதல் பணி தோல்வியில் முடிந்துபோனது. கந்தவேலின் சடலம் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 25) தேதி கரை ஒதுங்கியது.

ADVERTISEMENT

இந்த சம்பவம் மாவட்ட நிா்வாகத்துக்கு அதிா்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் தங்கள் குடும்பத்தாரை காரைக்கால் கடற்கரையில் குளிப்பதற்கு அனுமதிக்கவேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், விவரம் தெரியாதவா்கள் கடற்கரையில் குளிப்பதைக் கண்டால், பொதுமக்கள் காவல்துறையிடமோ, மாவட்ட நிா்வாகத்திடமோ தெரிவித்து, உயிா்களைக் காப்பதில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளுமாறு மாவட்ட நிா்வாகம் சாா்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT