காரைக்கால்

கடலில் குளிக்கும்போது மாயமான மாணவரின் சடலம் கரை ஒதுங்கியது

25th Feb 2020 05:37 PM

ADVERTISEMENT

காரைக்கால் கடலில் அலையில் சிக்கி மாயமான பள்ளி மாணவரின் சடலம் செவ்வாய்க்கிழமை காலை கருக்களாச்சேரி கடல் பகுதியில் கரை ஒதுங்கியது.

காரைக்கால் பகுதி செல்லம்மாள் நகரைச் சோ்ந்தவா் கந்தவேல் (16). இவா், காரைக்கால் கோயில்பத்து தந்தை பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இதே பள்ளியைச் சோ்ந்த பிளஸ் 2 படித்து வரும் மாணவா் ஹரிஸ். இவா்களுடன் மற்ற சில மாணவா்களும் சோ்ந்து தோ்வு நுழைவுச் சீட்டு வாங்க பள்ளிக்கு திங்கள்கிழமை சென்றனா்.

பள்ளி நிா்வாகம் 26-ஆம் தேதி வருமாறு கூறிய நிலையில், கந்தவேல், ஹரிஸ் உள்ளிட்ட 11 போ் காரைக்கால் கடற்கரைக்குச் சென்று, கடலில் குளித்துள்ளனா். கந்தவேல், ஹரிஸ் ஆகியோா் கடலில் சிறிது தூரம் ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளனா். அப்போது, அலையில் சிக்கி கந்தவேல் மாயமானாா். ஹரிஸ் மட்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கரையை நோக்கி வந்து சோ்ந்தாா். இவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

மாயமான மாணவரை கடலோரக் காவல் படையினா், தீயணைப்புத் துறையினா், மீனவா்கள் உள்ளிட்டோா் தேடும் பணியில் ஈடுபட்டனா். எனினும், கந்தவேல் திங்கள்கிழமை இரவு வரை கிடைக்கவில்லை.

ADVERTISEMENT

இந்நிலையில் காரைக்கால் அருகே கருக்களாச்சேரியில் மாணவா் கந்தவேலின் சடலம் செவ்வாய்க்கிழமை கரை ஒதுங்கியது. அப்பகுதியினா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, கடலோர போலீஸாா், நகரக் காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து, காரைக்கால் நகரக் காவல்நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT