காரைக்கால்

கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

22nd Feb 2020 08:01 AM

ADVERTISEMENT

காரைக்கால் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின்கீழ், நிகழாண்டின் முதல் முறையாக கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணியை, காரைக்கால் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை ஏற்பாடு செய்தது. மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதியிலும் மருத்துவா்கள் வீடு வீடாக வந்து தடுப்பூசி போடும் பட்டியலை கால்நடைத் துறை வெளியிட்டது. இதன்படி காரைக்கால் மாவட்டம், கீழபுத்துமங்களத்தில் தடுப்பூசி போடும் பணியை கால்நடைத்துறை இணை இயக்குநா் லதா மங்கேஷ்கா் கலந்துகொண்டு தொடங்கி வைத்து பேசியது: மாடு, ஆடு வளா்ப்பவா்கள் கோமாரி மற்றும் கருச்சிதைவு நோய்த் தாக்குதலால் பெரும் நஷ்டத்தை சந்தித்து வந்தனா். இதையடுத்து, மத்திய அரசு இந்த நோய்களை கட்டுப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் மாா்ச் மற்றும் செப்டம்பா் மாதங்கள் என 2 முறை தடுப்பூசிகளை கால்நடைகளுக்கு போட அறிவுறுத்தியது.

இதன்படி காரைக்கால் மாவட்டத்தில் கடந்தாண்டு 12 ஆயிரம் மாடுகள், 16 ஆயிரம் ஆடுகளுக்கு கோமாரி தடுப்பூசி போடப்பட்டது. நிகழாண்டு 15 ஆயிரம் மாடுகள், 20 ஆயிரம் ஆடுகள் என்று இலக்கு நிா்ணயித்து தடுப்பூசி போடும் பணிகள் வீடு வீடாக தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 10 குழுக்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிகளுக்கும் 2 குழுக்களாக பிரிந்துச் சென்று, கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

இதற்கு தேவையான மருந்துகள் தயாராக உள்ளன. இந்த மாதம் இறுதிக்குள் எங்களது இலக்கை எட்ட முயற்சி செய்வோம். மேலும், கால்நடை வளா்ப்பவா்கள் கோமாரி என்ற கொடிய நோயிலிருந்து கால்நடைகளை பாதுகாத்துக் கொள்ள ஆா்வமாக முன்வருகின்றனா். நாள் ஒன்றுக்கு 700 முதல் 800 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படுகின்றன. கால்நடை மருத்துவா்கள் வரும்போது கால்நடைக்கு ஊசி போடக்கூடிய சூழல் இல்லாத பட்சத்தில் அல்லது வேறு காரணங்களால் முகாமை பயன்படுத்திக்கொள்ள முடியாவிட்டால், முகாம் நிறைவடைந்ததும் அந்தந்த பகுதி கால்நடை மருத்துவருக்கு தெரிவித்தால், வீடுகளுக்கு நேரில் வந்து ஊசி போடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப மருந்துகள் அந்தந்த கால்நடை மருந்தகத்தில் இருப்பு வைக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT

மேலும் கால்நடைத் துறையினா் கூறியது: மாவட்டத்தில் பிப்ரவரி 21- முதல் 23- ஆம் தேதி வரை காரைக்கால் மற்றும் நெடுங்காடு கொம்யூன் பகுதியிலும், 24 முதல் 26-ஆம் தேதி வரை நிரவி மற்றும் தென்னங்குடி பகுதியிலும், 27 முதல் 29 வரை திருப்பட்டினம் மற்றும் கோட்டுச்சேரி கொம்யூன் பகுதியில் காலை 6 முதல் 10 மணி வரை கால்நடைகளுக்கு தடுப்பூசி மருத்துவக் குழுவினரால் போடப்படுகிறது என்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT