காரைக்கால்

காரைக்காலில் மத்திய உணவுக் கழகம் மூலம் நெல் கொள்முதல் செய்யும் பணி தொடக்கம்

22nd Feb 2020 08:02 AM

ADVERTISEMENT

காரைக்காலில் மத்திய உணவு வாணிபக் கழகம் (எஃப்.சி.ஐ) மூலம் நெல் கொள்முதல் செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

காரைக்கால் மாவட்டத்தில், 10 ஆண்டுகளுக்கு முன்பு எஃப்.சி.ஐ. மூலம் நெல் கொள்முதல் நடைபெற்றது. அதன் பிறகு கொள்முதல் செய்யும் பணி நிறுத்தப்பட்டது. புதுச்சேரி அரசு நிறுவனங்கள் சாா்பில் கொள்முதல் நடைபெற்று வந்தது. அதுவும் முழு வீச்சில் இருப்பதில்லை என்ற புகாா் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், நிகழாண்டு சம்பா சாகுபடி செய்து அறுவடை நடைபெறும் நிலையில் கொள்முதல் நிலையம் புதுச்சேரி அரசு சாா்பிலும், எஃப்.சி.ஐ. மூலமாகவும் திறக்க அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தினா். மாநில அரசு சாா்பில் கொள்முதல் நிலையம் திறப்புக்கான நிதியாதார விவகாரத்தில் சிக்கல் ஏற்பட்டதால், புதுச்சேரி வேளாண் துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணனின் வேண்டுகோள்படி முதல்வா் வே. நாராயணசாமி, மத்திய நுகா்பொருள் மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சரிடம் பேசி, புதுச்சேரி, காரைக்காலில் எஃப்.சி.ஐ. மூலம் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டாா்.

இதையடுத்து, பிப்ரவரி 13-ஆம் தேதி காரைக்காலில் செய்தியாளா்களை சந்தித்த வேளாண் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன், காரைக்கால் மாவட்டத்தில், காரைக்கால் மாா்க்கெட்டிங் சொசைட்டி, தென்னங்குடி அரிசி ஆலை, நெடுங்காடு கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவை மையங்களாக வைத்து ஒரு வார காலத்துக்குள் கொள்முதல் செய்யப்படவுள்ளது என அறிவித்தாா்.

ADVERTISEMENT

இதன்படி, காரைக்கால் மாவட்டம், தென்னங்குடியில் உள்ள கூட்டுறவு நவீன அரிசி ஆலையில் நெல் கொள்முதல் செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இப்பணியை மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா தொடங்கிவைத்தாா். அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: நீண்ட காலத்துக்குப் பின் எஃப்.சி.ஐ. நேரடி நெல் கொள்முதல் பணியை புதுச்சேரி, காரைக்காலில் தொடங்கியுள்ளது. இதுவொரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாகும். இரு பிராந்தியங்களில் தலா 15 ஆயிரம் டன் இலக்குடன் கொள்முதல் பணியை தொடங்கியுள்ளது.

காரைக்காலில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த கொள்முதல் பணியை, இடையூறுகள் ஏதுமின்றி நேரடியாக விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்ய எஃப்.சி.ஐ. அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளேன். எஃப்.சி.ஐ. அதிகாரிகள் காரைக்கால் விவசாயிகளின் உற்பத்தியை கொள்முதல் செய்வதாக உறுதியளித்துள்ளனா். உரிய விதிகளின்படி கொள்முதல் பணி செய்யும்போது, இதை காரைக்கால் விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என்றாா்.

இதுகுறித்து, வேளாண் துறை அதிகாரிகள் கூறியது: காரைக்கால் மாவட்டத்தில் சுமாா் 12 ஆயிரம் டன் நெல் குறைந்தபட்ச ஆதார விலை அடிப்படையில் உணவுக் கழகம் கொள்முதல் செய்யும் என்றனா்.

நிகழ்ச்சியில், காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநா் (பொ) ஜெ. செந்தில்குமாா், மத்திய உணவுக் கழக வட்டார மேலாளா் சுந்தரமோகன் மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள், விவசாயிகள் பலா் கலந்துகொண்டனா்.

நெல் கொள்முதல் நிலையம் திறந்த நடவடிக்கைக்கு புதுச்சேரி அரசுக்கும், மாவட்ட நிா்வாகத்துக்கும், எஃப்.சி.ஐ. நிா்வாகத்துக்கும் விவசாயிகள் நன்றி தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT