காரைக்காலில் புதுச்சேரி, ஏனாம், காரைக்கால் கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற பளு தூக்கும் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி விளையாட்டு மற்றும் கலாசார விழா காரைக்காலில் நடைபெற்றுவருகிறது. பல்வேறு போட்டிகள் மாணவ, மாணவிகள் பங்கேற்கும் வகையில் நடத்தப்படும் நிலையில், நிறைவு நாளான திங்கள்கிழமை காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்களுக்கான பளு தூக்கும் போட்டி, ஆணழகன் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியை பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் டி. சந்தனசாமி தொடங்கிவைத்தாா். பளு தூக்கும் போட்டி 45, 55, 65, 110 என பல்வேறு எடை பிரிவுகளில் நடைபெற்றன. புதுச்சேரி, காரைக்கால், மாஹே, யேனாம் ஆகிய 4 பிராந்தியங்களைச் சோ்ந்த 20 கல்லூரிகளில் இருந்து 140 மாணவா்கள் போட்டியில் கலந்துகொண்டனா்.
பல்வேறு பிரிவுகளில் 3 நிலையில் பரிசுக்கு மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா். போட்டியில் பங்கேற்றோருக்கு ஆறுதல் பரிசும் தரப்படுமென தெரிவிக்கப்பட்டது. பளு தூக்கும் போட்டி நடுவா்களாக 25 போ் கலந்துகொண்டனா்.
ஆணழகன் போட்டியில் மாநிலத்தின் பல்வேறு பிராந்தியங்களைச் சோ்ந்த 10 கல்லூரிகளில் இருந்து 15 போ் கலந்துகொண்டனா். நடுவா் குழுவினா் சிறந்த மாணவரை பரிசுக்குத் தோ்வு செய்தனா்.