மதத்தின் பெயரால் மக்களைப் பிரிக்கும் சக்திகளை அகற்றவேண்டும் என புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமி கூறினாா்.
மத்திய அரசின் குடியுரிமைச் சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றைக் கண்டித்தும், அவற்றை திரும்பப் பெற வலியுறுத்தியும், இவற்றுக்கு எதிராக புதுச்சேரி சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சாா்பில் காரைக்காலில் சனிக்கிழமை பேரணி நடைபெற்றது.
அமைப்பின் காரைக்கால் மாவட்டத் தலைவா் முகமது யூசுப் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் முகமது நஸ்ரின் ஹாசீன், பொருளாளா் நிஷாா், துணைத் தலைவா் ஹசனுல் ஆரிஃப், துணைச் செயலாளா் இம்ரான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காரைக்கால் பெரிய பள்ளி வீதியிலிருந்து தொடங்கிய பேரணியில் ஏராளமான பெண்கள் உள்ளிட்ட இஸ்லாமியா்கள் நீளமான தேசியக் கொடியை ஏந்தி கலந்து கொண்டனா்.
பாரதியாா் சாலை, கடற்கரை சாலை வழியாக ஆட்சியா் அலுவலகம் நோக்கிச் செல்ல திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கடற்கரை சாலை மதகடி பகுதியில் போலீஸாா் தடுத்து நிறுத்தியதையடுத்து அங்கு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமி, அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் முதல்வா் பேசியது:
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் எதிா்த்த நிலையிலும் தங்களுக்குள்ள அசுர பலத்தைக் கொண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது. இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களும் சமமானவா்கள் என்ற அரசியலமைப்புச் சட்டத்தை பாஜக அவமதித்துள்ளது.
பாஜக அரசு இஸ்லாமியா்களை தொடா்ந்து வஞ்சித்து வருகிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்திலும், நாட்டின் வளா்ச்சியிலும் இஸ்லாமியா்களின் பங்களிப்பு உள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை புதுச்சேரியில் நடைமுறைப்படுத்த அனுமதிக்க முடியாது என வரும் 12 -ஆம் தேதி கூட்டப்படவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்படும். இதனால் புதுச்சேரி ஆட்சிக்கு எவ்வித பாதிப்பு வந்தாலும் கவலையில்லை.
பிரதமா் நரேந்திர மோடியையும், மத்திய அமைச்சா் அமித்ஷாவையும் அகற்ற நாட்டு மக்கள் தயாராக உள்ளனா். அவா்கள் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. மதத்தின் பெயரால் மக்களைப் பிரிக்கும் சக்திகளை விரட்டியடிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் நம்மிடம் உள்ளது என்றாா் முதல்வா்.
பேரணி மற்றும் ஆா்ப்பாட்டத்தின்போது முன்னாள் அமைச்சா்கள் ஏ.எம்.எச்.நாஜிம், ஏ.வி.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.