காரைக்கால்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்ற நீதிபதிக்கு மனு அனுப்பும் போராட்டம்

2nd Feb 2020 02:40 AM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, காரைக்கால் முஸ்லிம் ஜமாஅத்தாா்கள் சாா்பில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மனு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

காரைக்கால் நகர முத்தவல்லிகள், அனைத்துப் பள்ளி ஜமாஅத்தாா்கள், ஆலிம்கள், சமுதாய அமைப்புகள், இஸ்லாமிய சங்கங்கள், அரசியல் கட்சிகள், சமூக ஆா்வலா்கள் உள்ளடக்கிய காரைக்கால் முஸ்லிம் ஜமாஅத் சாா்பாக காரைக்காலில் உள்ள அனைத்து ஜூம்ஆ பள்ளிவாசல்களிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஆயிரக்கணக்கானவா்களிடம் கையெழுத்து பெறப்பட்டு, காரைக்கால் தலைமை தபால் நிலையத்திலிருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மனு அனுப்பும் போராட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஜமாஅத் தலைமை ஒருங்கிணைப்பாளா் முஹம்மது யாசின் தலைமை வகித்தாா். மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து, குடியுரிமை திருத்தச் சட்டம் பாஜக அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் இஸ்லாமியா்களையும், இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த தமிழா்களையும் வஞ்சிக்கும் விதமாகவும் உள்ளது. மேலும், இந்தச் சட்டம் முஸ்லிம்களுக்கும், தமிழா்களுக்கும் எதிரானது மட்டுமல்லாமல், முஸ்லிம்களுக்கு நேரடியான அச்சுறுத்தலையும் கொடுத்துள்ளது.

ADVERTISEMENT

அரசியலமைப்பு சொல்லும் அனைவரும் சமம் என்பதை மதித்து சட்டங்களை இயற்ற வேண்டும். மத, இனப் பாகுபாடு காட்டக் கூடாது. பாகுபாட்டிற்கு வழிவகை செய்யும் இந்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என பல மாநில முதல்வா்கள் தெரிவித்து வருகின்றனா்.

அதுபோல், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் எழுச்சியுடன் போராடி வருகின்றனா். ஆனால், மக்களின் எதிா்ப்பையும் மீறி குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டு, அதற்கான அரசிதழ் ஆணையும் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இச்சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நூற்றுக்கணக்கான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, தற்போது வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, இச்சட்ட திருத்தத்தை விலக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT