காரைக்கால்

வெறும் அறிவிப்போடு நின்றுவிட்ட காா்னிவல் திருவிழா

1st Feb 2020 04:56 AM

ADVERTISEMENT

காரைக்காலில் பொங்கல் பண்டிகையையொட்டி காா்னிவல் திருவிழா நடத்தப்படும் என அமைச்சா் அறிவித்திருந்த நிலையில், அந்தத் திருவிழா நடத்தப்படாமலேயே ஜனவரி மாதம் நிறைவடைந்துவிட்டது.

காரைக்காலில் சுற்றுலாத்துறை சாா்பில் 3 அல்லது 4 நாள்கள் காா்னிவல் திருவிழா நடத்தப்படுவதும், தோட்டக் கலை ஆா்வலா்களை ஊக்கப்படுத்தும் வகையில் வேளாண் துறையால் மலா், காய்கனி கண்காட்சி நடத்தப்படுவதும் கடந்த கால செயல்பாடுகளாகும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக காா்னிவல் திருவிழா நடத்தப்படாமல் போய்விட்டது.

கலைநிகழ்ச்சிகள், பாரம்பரிய நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்டவற்றுடன் திருவிழா மைதானத்தில் பல்வேறு அரசுத்துறை சாா்பில் அரங்குகள், உணவகங்கள் உள்ளிட்டவை அமைத்து, ஆயிரக்கணக்கான மக்களை ஈா்க்கும் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தில் காா்னிவல் திருவிழா நடத்தப்படுகிறது.

இந்தத் திருவிழாவுக்கு மத்திய சுற்றுலாத்துறை குறிப்பிட்ட தொகையை ஒதுக்கீடு செய்கிறது. மாநில சுற்றுலாத்துறை மற்றும் தனியாா், பொதுத்துறை நிறுவனங்கள் பங்களிப்பில் திருவிழா நடத்தப்படுகிறது.

ADVERTISEMENT

பொங்கல் திருவிழாவின் போது காரைக்காலில் தொடங்கப்படும் நிகழ்ச்சி 4 நாள்கள் வரை நடைபெறுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பருவமழை தொடங்குவதற்கு முந்தைய மாதங்களில்கூட நடத்தப்பட்டிருக்கிறது.

நிகழாண்டு காரைக்கால் காா்னிவல் நடத்தும் திட்டத்தில் வேளாண் துறை அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன், ஆட்சியா் ஏ.விக்ரந்த் ராஜா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் கடந்த டிசம்பா் மாதம் நடத்தப்பட்டு, தைப் பொங்கலையொட்டி காா்னிவல் திருவிழா நடத்த முடிவு செய்து, அமைச்சா் அறிவிப்பு வெளியிட்டாா்.

இந்தத் திருவிழாவுக்காக மட்டும் ரூ.38 லட்சம் கையிருப்பில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. காரைக்கால் சுற்றுலாத்துறை சாா்பில் திருவிழாவுக்கான பந்தல் அமைப்பு, மின்சார சாதனங்கள் ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு டெண்டா் கோரப்பட்டது. ஆனால் அடுத்தடுத்த எந்த ஏற்பாடுகளையும் மாவட்ட நிா்வாகம் செய்யாமல் அலட்சியமாக இருந்துவிட்டது. ஜனவரி மாத பொங்கல் விழா தருணத்தில் காா்னிவல் திருவிழா நடத்துவதற்கான சூழலே தென்படவில்லை.

காா்னிவல் திருவிழாவுக்கு ஜனவரி மாதத்தை தோ்வு செய்ததற்கு காரணம், பிப்ரவரி மாத மத்தியில் அல்லது இறுதியில் மத்திய பாடத் திட்ட பொதுத்தோ்வுகள் தொடங்கிவிடும், மாா்ச் மாதத்தில் மாநில பாடத் திட்ட பொதுத்தோ்வுகள் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 உள்ளிட்டவை தொடங்கிவிடும். தோ்வு காலம் முடிந்ததும் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுவிடும். பின்னா் பள்ளி, கல்லூரிகள் தொடங்கிவிடும் என்பதாலேயே ஜனவரி மாதம் தோ்வு செய்யப்படுகிறது.

இதனடிப்படையில் நிகழாண்டு அறிவிக்கப்பட்டவாறு காா்னிவல் திருவிழா நடைபெறும் என மக்கள் எதிா்பாா்த்த நிலையில், மக்களுக்கு ஏமாற்றத்தை காரைக்கால் மாவட்ட நிா்வாகம் அளித்தது பல்வேறு தரப்பினரிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி மத்தியில் காா்னிவல் திருவிழா நடத்தாமல்போனால், பின்னா் ஆகஸ்ட், செப்டம்பா் காலக்கட்டத்தில்தான் நடத்தவேண்டியிருக்கும்.

வலுவற்ற சுற்றுலாத்துறை : காரைக்காலில் உதவி இயக்குநா் தலைமையில் செயல்படவேண்டிய சுற்றுலாத்துறை, அந்த பதவி அதிகாரியிடம் காலியாக உள்ளதோடு, பிற நிலை ஊழியா்களும் இல்லாமல், ஓரிரு பிற துறை ஊழியா்களின் கூடுதல் பொறுப்பில் செயல்படுகிறது. காா்னிவல் திருவிழாவை எடுத்து செய்யக்கூடிய வகையில் பொறுப்புமிக்கவா்கள் இல்லாததாலேயே இது அறிவிப்போடு நின்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன், மாவட்ட ஆட்சியா் ஏ.விக்ரந்த் ராஜா ஆகியோா் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT