காரைக்கால்: காரைக்காலில் கரோனா பரிசோதனை மையம் அமையாமல் இருப்பதற்கு, இங்குள்ள மக்கள் பிரதிநிதிகளின் அலட்சியமே காரணம் என பாஜக கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த கட்சியின் புதுச்சேரி மாநில இளைஞரணி துணைத் தலைவா் வழக்குரைஞா் ஜி. கணேஷ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கரோனாவை உறுதிப்படுத்த மாதிரி இங்கிருந்து திருவாரூருக்கு அனுப்பப்படுகிறது. காரைக்காலிலேயே பரிசோதனை மையம் அமைக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு எம்.எல்.ஏ. தொகுதியான ஏனாம் பிராந்தியத்தில் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், 5 உறுப்பினா்களை கொண்ட காரைக்காலில் அமைக்க முடியாமல் இருப்பதற்கு, இங்குள்ள மக்கள் பிரதிநிதிகளின் அலட்சியமே காரணம்.
காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனையில் போதிய இடவசதி, மருத்துவா்கள், செவிலியா்கள் இல்லாததால், கரோனா தொற்றாளா்கள் அவரவா் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுகிறாா்கள். மருத்துவமனையிலோ அல்லது பிற கரோனா சிகிச்சை மையங்களிலோ சிகிச்சை அளிக்க நலவழித் துறை நடவடிக்கை எடுக்கவில்லை.
காரைக்காலில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா் மிகுந்த அச்சமடையும் நிலைதான் உள்ளது. அச்சத்தைப் போக்கும் வகையில் மருத்துவமனையில் வசதிகள் இல்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.