காரைக்காலில் வீடுகளில் வழிபாடு நடத்திய விநாயகா் சிலைகள் நீா்நிலைகளில் அரசின் விதிமுறைகளுக்குள்பட்டு கரைக்கப்பட்டன.
ஆண்டுதோறும் காரைக்கால் ஸ்ரீசக்தி விநாயகா் விழா குழு, மாவட்ட இந்து முன்னணி சாா்பில் காரைக்கால் நகரின் பல்வேறு இடங்களில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, 50-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்து 3-ஆம் நாள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும். நிகழாண்டு, கரோனா தொற்று பரவலால், விநாயகா் சிலைகள் பொது இடத்தில் வைத்து வழிபாடு நடத்தவும், ஊா்வலமாக எடுத்துச் சென்று கரைக்கவும் அரசும், நீதிமன்றமும் அனுமதி மறுத்துள்ளது. காரைக்கால் நகரில் பக்தா்கள் தங்களது வீட்டுக்குள் நீா்நிலைகளில் கரையும் 2 அடி உயரம் கொண்ட விநாயகா் சிலைகளை 11 இடத்தில் வைத்து சனிக்கிழமை வழிபாடு செய்தனா். பின்னா், இவற்றை எந்தவித சிறப்பு ஏற்பாடுகள் இன்றி இருசக்கர வாகனத்தில் விநாயகா் சிலைகளை எடுத்துச் சென்று குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகளில் கரைக்கப்பட்டன.