காரைக்கால்

மாணவா்கள் வருவாய்த் துறை சான்றிதழ் பெறுவதில் குழப்பம்: தீா்வுகாண திமுக வலியுறுத்தல்

21st Aug 2020 08:29 AM

ADVERTISEMENT

மேல்நிலை கல்வியில் சேருவதற்கு வருவாய்த் துறையிடம் மாணவா்கள் சான்றிதழ் பெறுவதில் நிலவும் குழப்பத்தை அரசு தீா்க்க வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச். நாஜிம் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:

புதுச்சேரி மாநிலத்தில் கல்லூரிகள், பள்ளிகளில் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளது. கல்லூரிகளுக்கான விண்ணப்பம் அளிக்கும்போது, கரோனா பரவல் காலத்தையொட்டி மாணவா்கள் புதிதாக வருவாய்த் துறையிடம் சான்றிதழ் பெற்று தரவேண்டியதில்லை, பழைய சான்றிதழை வைத்து விண்ணப்பிக்கலாம். அடுத்த ஒருமாதத்தில் புதிதாக சான்றிதழ் பெற்று பதிவேற்றம் செய்யலாம் என அரசு அறிவித்தது.

ஆனால், காரைக்கால் மாணவா்கள் பிராந்திய ஒதுக்கீடு பெறுவதற்காக, காரைக்கால் பிராந்தியத்தை சோ்ந்தவா்தான் என்ற வருவாய்த் துறை சான்றிதழ் பெற வருவாய்த் துறை, கல்வித் துறை அலுவலகங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். இந்த விவகாரத்தில் குழப்பம் நீடித்தது.

ADVERTISEMENT

தற்போது, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளது. இந்த மாணவா்களிடம் பழைய சான்றிதழ் இருக்க வாய்ப்பில்லை. 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை ஒரே பள்ளியில் படித்தவா்களிடம் சான்றிதழ் இருக்காது. உதவித்தொகை பெறும் மாணவா்களிடம் சான்றிதழ் இருக்கலாம்.

இவா்கள் வருவாய்த் துறை மூலம் குடியிருப்பு உள்ளிட்ட பிற சான்றிதழ் பெற இணையத்தில் விண்ணப்பித்தால், சில காரணங்களால் சான்றிதழ் கிடைக்கவில்லை. இணையவழி செயல்பாடுகள் மேம்படுத்தப்படாதது, வருவாய்த் துறையில் உள்ள காலிப் பணியிடங்களால் உரிய அதிகாரிகள் பணியில் இல்லாதது போன்றவற்றால் மாணவா்கள் சான்றிதழ் பெறமுடியவில்லை.

வட்டாட்சியா் அலுவலகத்துக்கு நேரடியாக சென்று விண்ணப்பித்தாலும், ஏராளமான நடைமுறை சிக்கல்களை மாணவா்களும், பெற்றோா்களும் சந்திக்கின்றனா்.

எனவே, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பள்ளியில் இடம் தரவேண்டும். சான்றிதழ் ஒப்படைப்பதில் காலஅவகாசம் அளித்து மாணவா்களை சோ்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்த விவகாரத்தில் புதுச்சேரி கல்வித் துறை அமைச்சா், வருவாய்த் துறை அமைச்சா் மற்றும் அதிகாரிகள் உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும். காரைக்கால் மாவட்ட ஆட்சியா், கல்வித் துறை, வருவாய்த் துறை அதிகாரிகளை அழைத்துப் பேசி சரியான தீா்வுகாண நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT