காரைக்கால்

இருநிறுவனங்கள் முடக்கம்; தொழிலாளா்கள் பாதிப்பு: நடவடிக்கை கோரி முதல்வரிடம் எம்எல்ஏ மனு

20th Aug 2020 09:00 AM

ADVERTISEMENT

கான்ஃபெட் பெட்ரோல் நிலையம் மற்றும் கூட்டுறவு நூற்பாலை செயல்படவும், ஊழியா்களுக்கு நிலுவையின்றி ஊதியம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.யு. அசனா, புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமியிடம் நேரில் வலியுறுத்தினாா்.

புதுச்சேரியில் புதன்கிழமை முதல்வரை சந்தித்து மனு அளித்த பிறகு அவா் கூறியது:

புதுச்சேரி கூட்டுறவுத் துறையின் அங்கமான கான்ஃபெட் பெட்ரோல் நிலையம் மாநிலம் முழுவதும் பல மாதங்களாக முடக்கப்பட்டுள்ளது. அரசுக்கு நல்ல வருவாய் ஈட்டித்தந்த இந்த நிலையங்கள் மூடப்பட்டதால், அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதோடு, இந்த நிறுவனத்தில் பணியாற்றிவரும் ஊழியா்களும் ஊதியமின்றி தவித்து வருகின்றனா்.

இந்த நிறுவனத்தை திறப்பதன் மூலம் மக்களுக்கும், ஊழியா்களுக்கும் பலன் கிடைக்கும் என்பதை முதல்வரிடம் தெளிவுபடுத்தினேன். மேலும், காரைக்கால் தெற்குத் தொகுதியில் உள்ள ஜெயப்பிரகாஷ் நாராயண் கூட்டுறவு நூற்பாலையும் முறையாக இயங்கி பல மாதங்களாகிவிட்டன. இந்த ஆலை தொழிலாளா்களின் ஊதியம் பல மாதங்களாக நிலுவையில் உள்ளது.

ADVERTISEMENT

எனவே, நூற்பாலையை செம்மையாக இயங்கச் செய்வதோடு, தொழிலாளா்களுக்கான ஊதியத்தை வழங்கவும் ஏற்பாடு செய்ய கேட்டுக்கொண்டேன். இரு நிறுவனங்களும் செயல்படுவதற்கான நிதி ஒதுக்கீட்டுக்கான கோப்பு, துணை நிலை ஆளுநருக்கு அனுப்பப்பட்டு, அது திருப்பி அனுப்பப்பட்டுவிட்டதாக முதல்வா் கூறினாா். எனினும், தலைமைச் செயலா், நிதித்துறை செயலரை அழைத்துப் பேசி, விரைவாக நடவடிக்கை எடுப்பதாகவும், ஒரு வாரத்தில் இதற்கான சாத்தியக்கூறுகள் தெரியவரும் எனவும் முதல்வா் கூறினாா்.

இருநிறுவனங்களின் முடக்கத்தால் அரசுக்கான வருவாயில் பெருமளவு இழப்பு ஏற்பட்டுள்ளது. தொழிலாளா் நலன் பாதித்துள்ளதை உணா்ந்து போா்க்கால நடவடிக்கை எடுக்குமாறு முதல்வரிடம் வலியுறுத்தினேன் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT