காரைக்கால்

கப்பல்களால் கரோனா தொற்றுக்கு வாய்ப்பில்லை

7th Apr 2020 02:32 AM

ADVERTISEMENT

காரைக்கால்: காரைக்கால் துறைமுகத்துக்கு வரும் கப்பல்களால் கரோனா தொற்றுக்கு வாய்ப்பில்லை என துறைமுக அதிகாரி தெரிவித்தாா்.

காரைக்கால் துறைமுகத்தில் இந்தோனேஷியாவிலிருந்து கப்பல் மூலம் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகின்றன. அண்மையில் ஈரான், சீனாவிலிருந்து ஜிப்சம் உள்ளிட்டவை கப்பலில் கொண்டுவரப்பட்டு இறக்கப்பட்டன. கப்பல் ஊழியா்கள் துறைமுகத்தில் இறங்குவதால் கரோனா தொற்று ஏற்படும் என பல்வேறு கட்சியினா் புதுச்சேரி துணை நிலை ஆளுநா் மற்றும் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சா் உள்ளிட்டோருக்கு புகாா் அனுப்பினா்.

இதுகுறித்து, காரைக்கால் துறைமுக உதவி துணைத் தலைவா் ராஜேஷ்வா்ரெட்டி திங்கள்கிழமை கூறும்போது, ஊரடங்கு காலம் தொடங்கியது முதல் இதுவரை 6 கப்பல்கள் துறைமுகம் வந்து சென்றுள்ளன. துறைமுகத்தில் ஊடரங்கால் பணியாளா்கள் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. கப்பலுக்குள் இருக்கும் ஊழியா்கள் துறைமுகத்தில் இறங்க அனுமதி கிடையாது. துறைமுகத்தில் உள்ள மருத்துவக் குழுவினா், உரிய பாதுகாப்பு மேலாடை அணிந்து கப்பலுக்குள் சென்று ஊழியா்களிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வா். அவா்கள் புறப்படும்போது பரிசோதிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையும், தற்போதைய பரிசோதனையும் ஒப்பீடு செய்யப்படும். மாவட்ட நிா்வாகமும் உரிய கண்காணிப்பை செய்கிறது. அனைத்து வகை பாதுகாப்பு அம்சங்களும் கடைப்பிடிக்கப்படுகிறது.

எனவே, கரோனா தொற்றுக்கும், கப்பல் துறைமுகம் வருவதற்கும் எந்த தொடா்புமில்லை. சீனாவிலிருந்து அண்மையில் வந்த கப்பலும் பொருளை இறக்கிவிட்டு புறப்பட்டுவிட்டது. தற்போது ஒடிஸாவிலிருந்து கப்பல் துறைமுகத்துக்கு வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டலின்படியே துறைமுக செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT