காரைக்கால்

அத்தியாவசியப் பொருள்கள் வீட்டுக்கே வந்தும் நகரப் பகுதியில் திரளும் மக்கள்

7th Apr 2020 02:33 AM

ADVERTISEMENT

காரைக்கால்: மளிகை, காய்கனி, வங்கி சேவை ஆகிய அத்தியாவசியத் தேவைகளை வீட்டிலிருந்தே பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், கடை வீதிகளுக்கு மக்கள் வருவது குறைந்தபாடில்லை. இதனால், ஊரடங்கு கேள்விக்குறியாகியுள்ளது.

கரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மருந்துக்கடை, மளிகைக் கடை, காய்கனி கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விற்பனையகம் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசியப் பொருள்கள் வாங்க வந்ததாகக் கூறிக்கொண்டு கடை வீதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து வந்தது.

இதைக்கட்டுப்படுத்த, காரைக்கால் மாவட்ட நிா்வாகம் சாா்பில் மளிகை, காய்கனி ஆகியவற்றை போன் செய்தால், வீட்டுக்கே கொண்டுவந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், அரசின் நிவாரணத் தொகை உள்ளிட்ட வங்கி சேவைகளை வீட்டிலிருந்தபடியே பெற்றுக்கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், காரைக்கால் மாதா கோயில் சாலை, திருநள்ளாறு சாலை, காய்கனி மாா்கெட் செயல்படும் மூன்று கிணற்று பிளாஸ் தெற்குத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டம் வழக்கம்போல் உள்ளது. தேவையின்றி மோட்டாா் சைக்கிளில் வெளியே வருவோரை போலீஸாா் பிடித்து, எச்சரித்து அனுப்பினாலும், வழக்குப் பதிவு செய்தாலும், மோட்டாா் சைக்கிள்களில் சுற்றித்திரிவது குறைந்தபாடில்லை.

ADVERTISEMENT

இதுகுறித்து, காரைக்காலில் வருவாய்த் துறை அமைச்சா் ஷாஜகான் கூறியது:

மக்களுக்கு பொருள்களை வீடுகளுக்கே சென்று வழங்கினாலும், அவா்கள் விரும்பும் பொருளை கடை வீதியில் வந்து வாங்கவே முற்படுகின்றனா். அவா்களை தண்டிக்க முடியாது. எனினும் கரோனா பரவல் தொடா்பான ஆபத்தை உணா்ந்து மக்கள் செயல்படவேண்டும் என்றாா்.

போதிய காவலா்கள் இல்லை: காரைக்கால் மாவட்டத்தில் ரோந்து, கண்காணிப்பு பணி மேற்கொள்ள காவலா்கள் போதுமான அளவில் இல்லை. காவல் துறையினா் மூலம் உரிய சீரமைப்பு நடவடிக்கை உடனடியாக செய்யப்படாவிட்டால், அண்டை மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள கரோனா தொற்று, காரைக்கால் மாவட்டத்தில் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது என சமூக ஆா்வலா்கள் அச்சம் தெரிவிகின்றனா்..

 

ADVERTISEMENT
ADVERTISEMENT