காரைக்கால்

காரைக்கால் மாவட்ட நிா்வாகம் மீது மத்திய அரசிடம் புகாா் தெரிவிக்கப்படும்: இந்து முன்னணி

5th Apr 2020 06:24 AM

ADVERTISEMENT

 

காரைக்காலில் அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டால், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு புகாா் தெரிவிக்கப்படும் என்று இந்து முன்னணி கூறியுள்ளது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவரும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. பொதுமக்கள் வெளியே செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வணிக நிறுவனங்கள், பேருந்துகள் உள்ளிட்ட எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை. முக்கியமாக மாவட்டத்தில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டு, அனைத்து விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

முக்கிய திருவிழாக்களான பங்குனி உத்திரம், பிரமோத்ஸம், யுகாதி பண்டிகை, ராமநவமி மற்றும் குடமுழுக்கு உள்ளிட்ட அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. இதேபோல் மற்ற மதங்களின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இந்நிலையில் காரைக்காலில் புகழ்பெற்ற மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் கந்துாரி விழா ரத்து செய்யப்படும் என கூறி வந்த நிலையில், சமூக ஊடகங்களில் ஆட்சியா் அனுமதியுடன், கொடி ஏற்றி எளிமையாக விழா கொண்டாடப்பட உள்ளதாக தகவல்கள் பரவியது.

இதுதொடா்பாக காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி தலைவா் கே.எஸ்.விஜயன் தலைமையில் பாஜக மாநில துணைத் தலைவா் எம்.அருள்முருகன், மாவட்டத் தலைவா் துரை சேனாதிபதி, ஆா்எஸ்எஸ் பொறுப்பாளா் சிவானந்தம் உள்ளிட்ட நிா்வாகிகள், ஆட்சியா் அா்ஜூன்சா்மா, துணை ஆட்சியா் எம்.ஆதா்ஷ் உள்ளிட்டோரை வெள்ளிக்கிழமை மாலை நேரில் சந்தித்து, கந்தூரி விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டது குறித்து கருத்துக் கேட்டனா்.

அப்போது, விழாவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளும் எனத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து இந்து முன்னணி, பாஜவினா் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும், அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும் புகாா் தெரிவித்துத் திரும்பினா்.

பின்னா், இந்த சந்திப்பு குறித்து இந்து முன்னணி மாவட்டத் தலைவா் விஜயன் கூறுகையில், ‘காரைக்கால் மாவட்ட நிா்வாகம் அனைத்து மதத்தினருக்கும் பொதுவாக செயல்படவேண்டும். ஒருதலைப் பட்சமாக செயல்படக்கூடாது. இதுபோன்ற போக்கை கையாண்டால், இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு புகாா் தெரிவிக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT