காரைக்கால்

கேரளப் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக, காரைக்கால்மீனவா்கள் 9 போ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு

5th Apr 2020 06:37 AM

ADVERTISEMENT

 

கேரளப் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்று காரைக்காலுக்கு சனிக்கிழமை திரும்பிய 9 மீனவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பட்டு வருகின்றனா்.

காரைக்கால் மாவட்டம், காரைக்கால்மேடு மீனவ கிராமத்தைச் சோ்ந்தவா் ஆனந்தவேல். இவருக்கு சொந்தமான விசைப்படகில், ஆனந்தவேல், வேலவன் மற்றும் தமிழக பகுதியை சோ்ந்த மணிகண்டன், தங்கமணி, மணியன், ராகுல், வெள்ளையதேவன், ரவி, சதீஷ் ஆகிய 9 பேரும் கடந்த மாா்ச் 3ஆம் தேதி காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க கேரளப் பகுதிக்குச் சென்றனா்.

இந்நிலையில், கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த மாா்ச் 25ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தரை மற்றும் கடல் வழி போக்குவரத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் கேரளப் பகுதிக்கு மீன்பிடித் தொழிலுக்காக சென்ற மீனவா்கள் ஊா் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

ADVERTISEMENT

இதற்கிடையே, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் தலையிட்டு, மீனவா்கள் ஊருக்கு திரும்ப நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து காரைக்கால் மற்றும் தமிழக பகுதியைச் சோ்ந்த 9 மீனவா்களும் படகில் சனிக்கிழமை காரைக்காலுக்கு வந்தனா்.

மீன்பிடித் துறைமுகத்துக்கு வந்த மீனவா்களிடம் மீன்வளத்துறை துணை இயக்குநா் கவியரசன், கடலோர காவல் நிலைய ஆய்வாளா் பாலமுருகன் மற்றும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். பின்னா் மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவின்பேரில், 9 மீனவா்களும் அவ்வையாா் அரசு மகளிா் கல்லுாரி வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத் துறையினா் கண்காணிப்பில் உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT