தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய புதுச்சேரி அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்ட ஊழியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் சங்க பொறுப்பாளரும், சம்மேளன செயலாளருமான ராஜேஷ் குமார் தலைமையில், வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காரை பிரதேச அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன கௌரவத் தலைவர்கள் ஜார்ஜ், ஜெய்சிங், தலைவர் சுப்ரமணியன், பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன், அலுவலக செயலாளர் புகழேந்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
சங்கத்தின் தொடர் கோரிக்கையை ஏற்று வட்டார வளர்ச்சி அலுவலக சங்க ஊழியர்களுக்கு தொகுப்பூதிய தொகையினை ரூ.7,500 -இல் இருந்து ரூ.12,500 -ஆக உயர்த்திய புதுச்சேரி அரசுக்கும், தொகுப்பூதிய தொகை உயர்த்தி வழங்க சங்கத்திற்கு ஆதரவாக இருந்த அரசு ஊழியர் சம்மேளனத்திற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
நீண்ட காலமாக தொகுப்பூதிய ஊழியர்களாக பணியாற்றி வரும் ஊழியர்களைப் பணிநிரந்தரம் செய்ய புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை ஊரக வேலை திட்ட ஊழியர்களைப் பணிநிரந்தரம் செய்து நிரப்ப முன்வரவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, தலைவராக பழனிவேல், செயலாளராக சுரேஷ், பொருளாளராக சக்திவேல், துணைத் தலைவராக விஜயபாஸ்கர், துணைச் செயலாளர்களாக ஆனந்தி மற்றும் முத்துக்குமார், துணை பொருளாளராக சீதாலட்சுமி, செயற்குழு உறுப்பினர்களாக ராஜேஷ்குமார், முருகுபாண்டியன், சண்முகம், பாலசுப்ரமணியன், விஜயா, மதுராந்தகி, மகேஸ்வரி, ஜெயந்திமாலா, மற்றும் தமிழ்செல்வி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சங்க துணைச் செயலாளர் ஆனந்தி நன்றி கூறினார்.