திருநள்ளாறு கோயிலை சுற்றியுள்ள தெருக்களில் ஆக்கிரமித்து வைத்திருந்த விளம்பரப் பதாகைகளை பஞ்சாயத்து நிர்வாகத்தினர் போலீஸார் திங்கள்கிழமை அகற்றினர்.
திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேசுவரர் கோயிலில் மூலவர் தர்பாரண்யேசுவரர், தனிச் சன்னிதி கொண்டுள்ள சனீஸ்வர பகவானை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். நளன் குளத்தில் நீராடுதல், வடக்கு வீதி வழியே வரிசை வளாகத்தின் மூலம் கோயிலுக்கு செல்லுதல், பிற வழிகளில் கோயிலுக்குள் செல்லுதல் போன்றவற்றால் கோயிலை சுற்றியுள்ள வீதிகளில் பக்தர்கள் கூட்டம் மிகுதியாகவே காணப்படும்.
நான்கு வீதிகளிலும் வியாபார நிறுவனங்கள் பல உள்ளபோது, அவை சாலைகளை ஆக்கிரமித்து கடைகளை நீட்டித்தும், விளம்பரப் பதாகைகளை வைத்துள்ளன. பிரமோத்ஸவத்தில் 5 தேரோட்டம் நடைபெறும் சூழலில், பக்தர்களின் மிகுதியால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகையால், இந்த பாதிப்பு பெருமளவு மேலோங்குகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரமோத்ஸவத்தை காரணம் கூறி திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம், வணிகர்களுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற அறிவுறுத்தியது.
வணிகர்கள் சில இடங்களில் தாமாக முன்வந்து அகற்றினர். பின்னர், பஞ்சாயத்து நிர்வாகம் விடுபட்ட இடங்களில் அகற்றப் பணியை மேற்கொண்டது.
அடுத்த ஒரு மாதத்தில் மீண்டும் விளம்பரப் பதாகைகள் அதே இடத்தில் வைக்கத் தொடங்கினர். சென்னையில், அண்மையில் ஒரு மாணவி பதாகை விழுந்து விபத்துக்குள்ளாகி உயிரிழந்ததையொட்டி, புதுச்சேரி முதல்வர் வே. நாராயணசாமி, அனுமதியின்றி பதாகைகள் வைக்கக் கூடாது, அவ்வாறு வைக்கப்பட்டவற்றை அரசுத் துறையினர் அகற்றவேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜாவின் உத்தரவின்பேரில், திருநள்ளாறு சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த பதாகைகளை கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் (பொ) ரவி தலைமையில் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் அகற்றினர். திருநள்ளாறு காவல் நிலையத்தினர் ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு பாதுகாப்பு அளித்தனர்.