காரைக்கால்

ரூர்பன் திட்டத்தில் மேம்பாட்டுப் பணிகள்: அமைச்சர் ஆலோசனை

17th Sep 2019 07:57 AM

ADVERTISEMENT

திருநள்ளாறு பகுதியில் மத்திய அரசின் ரூர்பன் திட்டத்தில் மேம்படுத்தப்படும் திட்டப் பணிகள், செய்ய வேண்டிய பணிகள் குறித்து அமைச்சர்ஆலோசனை நடத்தினார்.
நகரத்துக்கு இணையாக கிராமப்புறத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு ரூர்பன் திட்டத்தின் மூலம் நிதியுதவி செய்கிறது. மத்திய அரசின் நிதி, மாநில அரசின் நிதி ஆகியவற்றின் மூலம் மக்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன. இதற்காக புதுச்சேரி பிராந்தியத்தில் ஒரு பேரவைத் தொகுதியும், காரைக்கால் பிராந்தியத்தில் திருநள்ளாறு பேரவைத் தொகுதியும் தேர்வு செய்யப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன.
இதுகுறித்து, ஆலோசனை நடத்தும் கூட்டம் வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் தலைமையில் திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பஞ்சாயத்து ஆணையர் (பொ) ரவி மற்றும் ரூர்பன் திட்டத்தை அமல்படுத்தும் துறையினர், கிராம முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர். திருநள்ளாறு பகுதியில் ரூர்பன் திட்டத்தில்  மேம்படுத்தும் திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகள் அமைச்சருக்கு விளக்கிக் கூறினர். இந்த தொகுதியில் உள்ள பிரதான சாலைகள், கிராமங்களுக்குச் செல்லும்  சாலைகள், கிராம உள்புறம் உள்ள எந்தெந்த சாலைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என கிராமத்தினரிடம் அமைச்சர் கேட்டறிந்தார். திருநள்ளாறு 9 கிராமப் பஞ்சாயத்துகளைச் சேர்ந்த பிரமுகர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு, தங்களது கிராமத்தில் செய்ய வேண்டிய சாலை உள்ளிட்ட திட்டப் பணிகள் குறித்து எடுத்துக் கூறினர். 
ரூர்பன் திட்டத்திலும், வேறு துறையின் நிதியின் மூலமும்  மேம்படுத்துவது குறித்து திட்டம் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
பருவ மழை தொடங்கும் முன்பாக எந்தெந்த பணிகளுக்கு முன்னுரிமை தரவேண்டுமோ அவ்வாறு செய்ய வேண்டும். பருவ மழைக்குப் பின்னர் விரிவானத் திட்டத்தை தொடங்கி காலத்துடன் முடிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT