காரைக்கால்

காரைக்கால்: பொதுமக்களின் மனுக்களுக்கு 3 நாளில் தீர்வு: அரசு அதிகாரிகளிடம் முதல்வர் கண்டிப்பு

17th Sep 2019 08:01 AM

ADVERTISEMENT

பொதுமக்கள் தரும் மனுக்களுக்கு 3 நாள்களுக்குள் தீர்வு காணவேண்டும் என புதுச்சேரி முதல்வர் வே. நாராயணசாமி அரசுத் துறையினரை எச்சரித்தார். 
காரைக்காலுக்கு திங்கள்கிழமை வந்த முதல்வர் வே. நாராயணசாமி, திருமலைராயன்பட்டினத்தில் வெங்கடேசப் பெருமாள் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்றார். இதையடுத்து, பெருந்தலைவர் காமராஜர் அரசு நிர்வாக வளாகத்தில் அரசு அலுவலகங்களுக்குச் சென்று முதல்வர் ஆய்வு செய்தார். அதிகாரிகள், ஊழியர்கள் வருகை உறுதிப்படுத்தப்படவேண்டும். மக்கள் கோரிக்கைகள் உடனுக்குடன் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசு மூலம் அனுப்பப்படும் கோப்புகளை 3 நாள்களுக்குள் தீர்வு காண வேண்டும் என்று கண்டிப்புடன் கூறினார்.  
குறிப்பாக, நகரமைப்புக் குழும அலுவலகத்தில் ஆய்வு செய்த முதல்வர், வீட்டு மனைகள் விற்பனையாளர்கள், காரைக்கால்  நகரமைப்புக் குழும அலுவலகத்தில் பணிகள் தாமதமாக நடைபெறுவதாக புகார் கூறுகின்றனர். இதனால், பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன என கூறிய முதல்வர், மனுக்கள் உடனுக்குடன் பரிசீலிக்க வேண்டும். விரைவாக உரியோருக்கு அனுமதி கிடைக்கும் வகையில் அரசு நிர்வாகத்தினரின் பணிகள் இருக்கவேண்டும்.
அனுமதிக்காக வருவோருக்கு எந்தவித காரணமும் கூறி நாள்களை கடத்தாமல், சாதகமான ஆவணங்கள் வரும்போது, அதை பரிசீலித்து விரைவாக அனுமதி தரவேண்டும். காலிப் பணியிடங்களால் தாமதம் என கூறிக்கொண்டு இருக்கக் கூடாது. நகரமைப்புக் குழுமம் தன்னாட்சி அமைப்பாகும். எனவே, தற்காலிகமாக தேவையான ஆள்களை நியமித்து பணிகளை செய்ய வேண்டும் என அதிகாரிகளை எச்சரித்தார் முதல்வர்.
அரசு தொழிற்பயிற்சி நிலையம்: தொடர்ந்து அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு சென்று ஆய்வு செய்து, ஆசிரியர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, தொழிற் பயிற்சி நிலையத்தில் உள்ள குறைபாடுகள் குறித்தும், நிலையத்தில் புதிய பாடப் பிரிவுகள் தொடங்க வேண்டும், நிலையக் கட்டடம் பழைமையானதாக உள்ளது, இதை நவீன முறையில் கட்டவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மாணவர்கள் முதல்வரிடம் தெரிவித்தனர். இதுசம்பந்தமாக துறை அமைச்சர், அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் கூறினார்.
இதையடுத்து, காரைக்கால் நகரப் பகுதியில் சேத்திலால் நகரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிக்கு முதல்வர் மற்றும் வேளாண் மற்றும் கல்வித் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.ஏ.யு. அசனா, கீதாஆனந்தன் மாவட்ட ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா ஆகியோர் சென்றனர்.
பள்ளி முழுவதும் பார்வையிட்ட முதல்வர், மாணவர் மற்றும் ஆசிரியர்கள் வருகைப் பதிவேட்டை  பார்வையிட்டார். மாணவர்களுக்கு வழங்க வைத்திருந்த மதிய உணவை முதல்வர் சாப்பிட்டுப் பார்த்து, பள்ளி நிர்வாகத்தினருக்கு ஆலோசனைகள் வழங்கினார். தொடர்ந்து, வகுப்பறைக்குச் சென்ற முதல்வர், மாணவர்களிடம் மொழிப் பாடங்கள் குறித்து தகவல்களை எழுதச் சொல்லி பார்வையிட்டார். மாணவர்களின் திறமையை பார்த்த முதல்வர் அவர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தார். பள்ளி வளாகத்தை, குறிப்பாக கழிப்பறைகளை பள்ளி நிர்வாகத்தினர் தூய்மையாக வைத்திருக்க வேண்டும், தூய்மையின் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT