காரைக்கால்

காரைக்கால் புதுக்குளம் தூர்வாரும் பணி: எம்.எல்.ஏ. ஆய்வு

10th Sep 2019 07:10 AM

ADVERTISEMENT

காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள புதுக்குளம்  தூர்வாரப்பட்டு வருவதை எம்எல்ஏ கே.ஏ.யு. அசனா ஆய்வு மேற்கொண்டார்.
காரைக்கால் - திருநள்ளாறு சாலையோரத்தில், சந்தைத் திடல் அருகே புதுக்குளம் உள்ளது.  இந்த குளம் காரைக்கால் புதிய பேருந்து நிலையம் முதல் ஆசிரியர் நகர், முருகராம் நகர் மற்றும் சுற்றுவட்டார குடியிருப்புகளின் கழிவுநீர் சேரும் குளமாக மாறியதோடு,  ஆகாயத் தாமரைச் செடிகள் மண்டி மாசடைந்து காணப்பட்டது.
இந்நிலையில் காரைக்கால் கைலாசநாதர் - நித்யகல்யாணப் பெருமாள் தேவஸ்தானம் சார்பில், புதுக்குளம் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆகாயத் தாமரைச் செடிகள் அகற்றப்பட்ட நிலையில், குளத்தில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் கிடப்பதால், அவற்றை எவ்வாறு அகற்றி அடுத்தக்கட்டப் பணிகள் மேற்கொள்வது என்பது குறித்து கோயில் நிர்வாகத்தினர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையில், காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனாவை, குளத்தை பார்வையிட வரும்படி கோயில் நிர்வாகத்தினர் அழைப்புவிடுத்திருந்தனர். பேரவை உறுப்பினர் திங்கள்கிழமை கோயில் நிர்வாகத்தினருடன் சென்று, தூர்வாரப்படும் புதுக்குளத்தைப் பார்வையிட்டார்.
பின்னர், அவர் கூறியது:  புதுக்குளத்தை கோயில் நிர்வாகம் தமது  சொந்த செலவில் தூர்வாரி வருகிறது. தற்போது, ஆகாயத் தாமரைச் செடிகள் அகற்றப்பட்டு, தண்ணீர் அப்புறப்படுத்தப்பட்ட  பின்னர், ஏராளமாக பிளாஸ்டிக் கழிவுகள் குளத்தில் தேங்கிக் கிடக்கின்றன. இவற்றை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல பகுதிகளில் இருந்து குளத்துக்கு வரும் கழிவுநீரை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தவுள்ளேன். சுற்றுவட்டாரத்தைச் 
சேர்ந்தோர் குளத்தை நல்ல முறையில் பராமரிக்க முன்வந்துள்ளனர் என்றார் அவர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT